தேர்தல் ஆணையம் மூலம் நூதன மோசடி – பீகார் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தச் சூழலில் கடந்த திங்கட்கிழமை திடீரென பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பிரிவு 326 இன் கீழ் வாக்காளராகும் தகுதி அடிப்படையில் இந்த திருத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.

குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஒவ்வொரு தொகுதியிலும் இடம் பெற்ற சாதாரண குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெறத் தகுதி பெற்றவர்கள் என்றும் தெரிவித்த தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது.

இந்த நடவடிக்கை மாநில அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை வேண்டுமென்றே அதிக அளவில் நீக்கும் அல்லது அதிக அளவில் சேர்க்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த புகாருக்கு மத்தியில் பீகார் தவிர அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் இதே போல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வங்கதேசம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட சட்டவிரோத வெளிநாட்டுக் குடியேறிகள் மீது பல்வேறு மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே சுமார் 50 இலட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் தான் தேர்தல் முடிவுகள் மாறின.

மக்களவைத் தேர்தலில் வென்ற இந்தியா கூட்டணி, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தது என்று காங்கிரசு குற்றம் சாட்டியது.

இதே பாணியை பீகார் தேர்தலிலும் கடைபிடிக்க முயல்வதாக காங்கிரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது, நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான தீர்வு என்ற பெயரில் மறைக்கப்பட்ட வஞ்சகமான மற்றும் சந்தேகத்திற்குரிய திட்டமாகும். அரசு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அடையாள மற்றும் குடியிருப்பு ஆவணங்களைச் சரிபார்ப்பதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் பெரும் அபாயம் உள்ளது.பீகாரில் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. தற்போதைய வாக்காளர் பட்டியலை நிராகரித்து, முற்றிலும் புதிய பட்டியலை உருவாக்கும் தந்திரமாக இருக்கிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பீகார் தேர்தலைப் போல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம் மாநிலங்களிலும் வெற்றி பெற தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு பா.ஜ.க சதி செய்வதாக திரிணாமுல் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response