
திண்டுக்கல்லில் ஜூன் 28 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன்.அப்போது அவர் கூறியதாவது….
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். முதலமைச்சராக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அது யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதலமைச்சர் வேட்பாளராகக் கூட ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை இருந்ததில்லை. தொகுதி உடன்பாடுதான் இருந்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று அமித்ஷா சொல்கிறார். அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து பாஜக தனது கூட்டணியில் சேர்த்திருக்கிறது. அந்தந்த மாநில கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, அந்தக் கட்சியை காலி செய்வதுதான் பாஜகவின் வழக்கம். தமிழ்நாட்டிலும் அப்படித்தான் பாஜக, அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது.
அதிமுக தொண்டர்கள் இந்தக் கூட்டணியை ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போன நிலையில், தற்போது முருகனைக் கையில் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று முயற்சித்து வருகிறார்கள். முருகன் மீது மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாமா? என பாஜக நினைக்கிறது. மதுரையில் நடந்த முருகன் மாநாடு அரசியல் மேடையாக பயன்படுத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து இழிவுபடுத்தி வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த விழா மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்றனர். அந்த மாநாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார். அரசியல் மாநாடாக மாறிய பிறகு அப்படிப் பேசுவார்கள் என்று நினைக்கவில்லை என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
மதுரை வந்த அமித்ஷா முருகன் மாநாட்டுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.பிரச்சினை வந்தவுடன் மதுரையில் நடந்த முருகன் மாநாட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அந்த மாநாட்டை இந்து முன்னணி தான் நடத்தியது என்கிறது பாஜக. பாஜக சொந்தமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் கட்சியில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல முகங்கள் உண்டு. அதில், பாஜகவும், இந்து முன்னணியும் ஓர் அமைப்பு தான்.
தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட யாரும் இல்லை. அவர்களின் கூட்டணி கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக இருப்பார்கள் என்று கூறி அவர்களுக்குள் ஒரு மோதலை உருவாக்கி, அந்தக்கட்சியை எதிர்காலத்தில் இல்லாமல் செய்வதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. எனவே, அதிமுக தனது நிலையை நாட்டுமக்களுக்குச் சொல்ல வேண்டும்
இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.


