
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சமஉ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில், ஆற்றல் அசோக்குமார் தனது சொத்து மதிப்பு ரூ.683 கோடி என கணக்குக் காட்டி இருந்தார்.
கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில் 2006 ஆம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குநராக இருந்த இவர், கடந்த மார்ச் 24 ஆம் தேதி, பள்ளிக்கு நட்டம் ஏற்படுத்தியதாக நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்து அதிகாரங்களும் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், மற்றும் சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கோடை விடுமுறையில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு, அப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் சென்றது. அதில் உள்ள இணைப்பில் சென்று கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி சுமார் 3000 பெற்றோர், ரூ.40 கோடியை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இந்தப் பணம் ஏற்கனவே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநராக இருந்த அசோக்குமார் நிறுவன வங்கிக் கணக்கிற்குச் சென்றுள்ளது.
‘இந்தியன் பப்ளிக் ஸ்கூல் எக்ஸலன்ஸ்’ என்ற அந்தக் கணக்கை உருவாக்கி அதன் இணைப்பை பெற்றோருக்கு அனுப்பி இந்த மோசடி நடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சில பெற்றோர் நேரடியாக நிர்வாகக் குழுவிடம் கேட்ட போது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மார்ச் 24 ஆம் தேதியே நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆற்றல் அசோக்குமார் நீக்கப்பட்ட நிலையில் இந்தப் பணம் அவருக்குச் சென்றுள்ளது.
இதையடுத்து பள்ளியின் புதிய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த சிவசங்கரன் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆற்றல் அசோக்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த கில்பர்ட் ஜேம்ஸ் லூர்துராஜ், கார்த்திகேயன் துரைசாமி, சொக்கலிங்கம், விஜயகுமார், பிரபாகரன் ஆகிய 6 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம், உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிப் பேருந்துகள் வாங்க பள்ளி இயக்குநர்கள் குழு அனுமதியின்றி போலியான ஆவணங்களைக் காட்டி அசோக்குமார் ரூ.9.69 கோடி கடன் பெற்றுள்ளார். பேருந்தின் அசல் விலை சுமார் ரூ.26 இலட்சமாக இருக்கும் நிலையில், அதனை ரூ.32 இலட்சத்திற்கு விலைக்கு வாங்கி இலாபம் பெறும் நோக்கத்தில் செயல்பட்டதும் கண்டறியப்பட்டது. நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது போல போலியான ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட காவல்துறையினர் ஆற்றல் அசோக்குமார் மீது 336(3), 340(2), 316 (2), ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பள்ளியில் இருந்த அனைத்து ஆவணங்கள், வன் தட்டு (ஹார்டு டிஸ்க்) ஆகியவற்றையும் அசோக்குமார் எடுத்துச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.
இவை மட்டுமின்றி இன்னொரு புகாரும் அவர் மீது வந்துள்ளது. அது என்ன?
மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் சோனாலி கீத் (56). இவர் கோவை தேவம்பாளையத்தில் உள்ள இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் தலைமைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் 4-12-2024 இல் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நிர்வாக இயக்குநராக உள்ள ஆற்றல் அசோக்குமார் தன்னை வேலையை ராஜினாமா செய்யச் சொல்லியும், பள்ளிக் குடியிருப்பைக் காலி செய்யுமாறும் மிரட்டி வருகிறார். தனக்குப் பாதுகாப்பு கொடுப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், கோவில்பாளையம் காவல்துறையினர் ஆற்றல் அசோக்குமார் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 4 ஆம் தேதி ஆற்றல் அசோக்குமார் மனைவி கருணாம்பிகா உடல்நலக் குறைவால் காலமானார்.
அதைத் தொடர்ந்து ஆற்றல் அசோக்குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் காவல்துறையில் புகார்களும் குவிந்து வருவது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


