
அண்மைக்காலமாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் அவர் மகன் அண்புமணிக்கு இடையே அதிகாரப்போட்டி நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில்,நேற்று காலை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் இராமதாசை அன்புமணி சந்தித்தார்.
காலை 9.10 மணிக்கு தனது இளைய மகள் சஞ்சுத்ராவுடன் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றார். இராமதாசுடன் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியபோது கட்சியின் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே இராமதாசின் மூத்த மகள் காந்திமதி காலை 9.50 மணியளவில் தோட்டத்துக்குச் சென்றார். அவர் சென்ற 15 நிமிடங்களில் அன்புமணி பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு தோட்டத்தில் இருந்து இறுகிய முகத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
பாமக நிறுவனர் இராமதாசுடன் சந்திப்பின்போது என்ன நடந்தது என அன்புமணியிடம் செய்தியாளர்கள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, மகிழுந்து கண்ணாடியைக் கூட திறக்காமல் கையெடுத்துக் கும்பிட்டபடி அன்புமணி கிளம்பிச் சென்றார். இதனால் உள்ளே என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
அன்புமணி தோட்டத்தை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதைதுரைசாமி ஆகியோர் ஒரே மகிழுந்தில் சென்று இராமதாசை சந்தித்துப் பேசினர். சுமார் 3 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடந்தது.
பாமகவில் தொடர்ந்து மோதல் இருந்தால், நன்றாக இருக்காது என்று அவர்கள் இருவரும் சமாதானம் பேசியுள்ளனர். ஆனால் இராமதாசோ இது எங்கள் குடும்ப விவகாரம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இராமதாஸ்-அன்புமணி சந்திப்பு குறித்து இராமதாசின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் உலவும் தகவல்கள்…
அடுத்த 6 மாதத்துக்கு கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் நானே இருப்பேன். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி நீடிப்பார். இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் இருப்பார். சவுமியா கட்சிக்குள் வரக்கூடாது. 2 மகள்களுக்கும் பொதுவாக உள்ள சொத்துகள் மற்றும் பணத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று 5 நிபந்தனைகள் விதித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இவற்றில் சொத்து தொடர்பான விசயத்தில் இராமதாசின் கருத்தில் அன்புமணிக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் இந்தச் சந்திப்பின் மூலம் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள்.


