மிரட்டும் பாஜக மிரளாத இராமதாசு – பாமக பரபரப்பு

பாமக நிறுவனர் இராமதாசு, செயல் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் முற்றியிருந்த நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அன்புமணி திடீரென மகள் சஞ்சுத்ராவுடன் தைலாபுரம் சென்றார்.45 நிமிடங்களில் அன்புமணி இறுகிய முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த சில மணித்துளிகளில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் இராமதாசைச் சந்தித்தனர். சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியபின் அங்கிருந்து இருவரும் புறப்பட்டனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என குருமூர்த்தி கூறினாலும், மரியாதை சந்திப்பு 3 மணி நேரமாகவா தொடர்ந்தது என்ற கேள்வியை பாமகவினரே எழுப்பினர்.

நேற்று காலை ராமதாஸ் ஓய்வில் இருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்கவில்லை என்றும் தோட்டத்தில் தகவல் வெளியாகின. ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு தொடர்பாக பாமக தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் வெளியாகாத நிலையில், சில முடிவுகளை எடுக்க முடியாமல் இராமதாசு திணறி வருவதாகவும், குழப்பம் நீடிப்பதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் வேலு, முன்னாள் பாமக தலைவர் பேராசிரியர் தீரன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தைலாபுரம் சென்றனர். இவர்களுடன் இராமதாசு ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பாஜக கூட்டணிக்கு அழைப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தியை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் தைலாபுரத்தில் இராமதாசை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசிவிட்டுச் சென்னை திரும்பிய பின், அவரை அன்புமணி இரகசியமாகச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தூதுவர் மூலம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், இராமதாசின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு பாஜகவின் டெல்லி தலைவர்கள் அழுத்தமே காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இராமதாசை வெளிப்படையாகச் சந்தித்துப் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி அன்புமணியை இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதால் பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்குப் பின்னணியில் பாஜக இருப்பது உறுதியாகிவிட்டது எனவும் அதேபோல் பாஜக கூட்டணியில் சேர மருத்துவர் இராமதாசு இதுவரை உடன்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும் அக்கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள்.

Leave a Response