
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது.ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) இந்த நிதியுதவி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒன்றிய அரசு 60 விழுக்காடு, மாநில அரசு 40 விழுக்காடு என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழ்நாடு உட்பட மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ நிதியை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்த வகையில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் 2023-24 கல்வியாண்டின் 4 ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மேலும், பள்ளிக் கல்வித் துறையின் முக்கியத் திட்டங்களும் தடைப்படும் சூழல் நிலவுகின்றன.
ஒன்றிய அரசு நிதியை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று, உத்தரப் பிரதேசம் மாநிலம் வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாகக் கேட்கப்பட்டது.
அதற்கு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசிய கல்வியைக் கொள்கையை ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.
முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. அதன்பின் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள். இது அவர்களின் தவறு. இதில் தமிழ்நாடு அரசுதான் அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழ்நாட்டு வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.
உண்மையில், தேசியக் கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. அப்படியெனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழ்நாடு அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது
இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சமூகவலைதளப் பதிவில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….,
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்
– பேரறிஞர் அண்ணா
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அதன்பின் திருச்சியில் பேட்டியளித்த அவர், 2018 ஆம் ஆண்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை இப்போது மட்டும் மறுப்பது ஏன்? அப்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் கூறும் விதிமுறைகள் இல்லையா? மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டும் நிதி என்பது முறையல்ல
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


