நடிகை சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் சாய்பல்லவியைப் புறக்கணிப்போம் எனும் பொருளில் BoycottSaiPallavi எனும் குறிச்சொல்லுடன் சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் திடீரென பரப்பப்படுகிறது.
அதற்குக் காரணம் என்ன?
சாய் பல்லவி மற்றும் ராணா டகுபதி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு விரத பர்வம் என்னும் தெலுங்கு திரைப்படம் வெளியானது. 1990 களில் வாழ்ந்த மாவோயிஸ்டுகளின் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில், மாவோயிஸ்ட்டை காதலிக்கும் வெண்ணிலாவாக சாய்பல்லவி நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது அவர் ஒரு கொடுத்த ஒரு நேர்காணலில்,
எனக்கு வன்முறை குறித்தும், எது சரி எது தவறு என்பது குறித்தும் புரிந்துகொள்வதும் கஷ்டம்.துப்பாக்கி தூக்குவதால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என மாவோயிஸ்டுகள் என்று கூறப்படும் மக்கள் நம்பினார்கள். ககாஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதைக் காட்டினார்கள். அதே போல் காஷ்மீரில் பசுக்களை ஏற்றிச் சென்றவர் இஸ்லாமியராக இருந்ததால் அவரை அடித்து ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்ல வைத்தார்கள்.
பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் இந்திய இராணுவத்தை பயங்கரவாதிகள் எனச் சொல்வார்கள். அதுபோல் இருதரப்புக்கும் பார்வைகள் மாறும்.
இவ்வாறு அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த பேட்டி அப்போதே பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், தனது தரப்பு விளக்கத்தை சாய் பல்லவி தந்திருந்தார்.
இந்த நிலையில் அமரன் திரைப்படம் வெளியாகும் இந்தச் சூழலில் இச்சிக்கல் மீண்டும் தலைதூக்கி உள்ளது. மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அமரனில் நடித்துள்ள சாய்பல்லவி பட விளம்பரத்துக்காக இராணுவ வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஒரு தரப்பினர் இந்திய இராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் என்ற தொனியில் பேசியவர், இராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதையும் அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதையும் ஏற்கமுடியாது என்று கூறி வருகின்றனர்.
மேலும், தங்கல் போன்ற பெரிய வெற்றிப் படங்களை இயக்கிய நித்தேஷ் திவாரி தற்போது ராமாயணா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில்,ராமராக ரன்பீர் கபூரும் சீதாவாக சாய் பல்லவியும் இராவணனாக யஷூம் நடிக்கிறார்கள். இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜெய் ஸ்ரீராம் பெயரை சாய் பல்லவி அவமதித்துவிட்டதாகவும் அவர் சீதாவாக நடிக்கக் கூடாது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
இதுகுறித்து சாய்பல்லவி இரசிகர்கள்,ஏற்கெனவே விளக்கம் கொடுத்து முடிந்துவிட்ட ஒரு பழைய பேட்டியை வைத்துக் கொண்டு மீண்டும் சாய்பல்லவி மீது வெறுப்பைக் கக்குகிறார்கள் சங்கிகள்.சாய்பல்லவி மேஜர் முகுந்த்தின் மனைவியாக நடிப்பதும் சீதையாக நடிப்பதும் அவருடைய நடிப்புக்காகக் கிடைக்கும் வாய்ப்புகள்.அவற்றை இந்த சங்கிகளால் புரிந்துகொள்ள முடியாது.அவர் எல்லாவற்றையும் தன் வசீகரப் புன்னகையால் கடப்பார் என்கிறார்கள்.