பேய் கதைனா என்ன ?? பூமியில் பிறந்து ஆசைகள் நிறைவேறாமல் அகால மரணமடைந்தவர் பழி வாங்குவது , சொத்துக்காக கொலை செய்யப்பட்டவர் பழி வாங்குவது , காதல் தோல்வியில் மரணித்து பழி வாங்குவது , ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்து அந்த ஆவி பழி வாங்குவது …. இதெல்லாம் தானே நமக்கு தெரியும் ???
ஆனால் இயக்குனர் விஜய் வித்தியாசமா யோசிச்சிருக்கார்… அறியாத வயதில் ஒரு ஆணும் பெண்ணும் தவறு செய்ததில் அந்த கருவை வளர்க்கும் சூழ்நிலை இல்லாமல் அதை சிதைத்து, அந்த சிசு பழி வாங்கும் கதை தான் தியா …..
கருகலைத்து 5 வருடங்கள் கழித்து நாயகி சாய் பல்லவியும், நாயகன் நாக சவுரியாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஆனால் சாய் பல்லவி சிதைந்த அந்த கருவை அவள் கைவண்ணத்தில் ஓவியமாக்கி அதற்கு தியா என பெயர் சூட்டி அதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
சாய் பல்லவியின் நினைவில் தியாவாக வாழும் அந்தக் கரு தன் உயிரிழப்புக்கு காரணமான ஒவ்வொருவராகப் பழி வாங்குகிறது.
அடுத்தடுத்த கொலை, குடும்பத்தினரை அதிர்ச்சியாக்குகிறது. பிறகு, குடும்ப டாக்டரும் பலியாக, அதில் இருக்கும் சில ஒற்றுமைகளால் இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்கிறார் சாய் பல்லவி. பிறகுதான் அந்த அமானுஷ்யத்தை தெரிந்துகொள்கிறார்
இப்படி இருக்க அடுத்தது நாக சவுரியா கொல்லப்படுவாரோ என்று பயப்படும் சாய் பல்லவி அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால் இவரின் வித்தியாசமான நடவடிக்கையை நாக சவுரியா சைக்கியாரிஸ்ட்டிடம் அழைத்து செல்ல வைக்கிறது.அமானுஷ்யம் இருக்கிறது என்பதை மறுத்தாலும் கடைசி கட்டத்தில் தியா இருக்கிறாள் என நம்புகிறார் நாக சவுரியா.
தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க குடும்பத்தினர் திட்டமிடும்போது பதைபதைப்பது, தன் கணவன் உயிரைக் காப்பாற்றத் துடிப்பது, முதல்முறை தனது மகள் இருப்பது தெரிந்து இனம்புரியாத உணர்வில் அழுவது, தியா தியா என்று அழைத்து குழந்தை இருப்பதை உணர்ந்து புன்னகைப்பது என சாய் பல்லவி நம்மில் ஒரு அதிர்வை உருவாக்கி தான் உள்ளார்.
க்ளைமேக்சில் விபத்தில் சாய் பல்லவி சிக்கி கொள்ள , அவர் ஆன்மா தன் கணவரை தியாவிடம் இருந்து காப்பாற்ற முன் வர , அந்த தாய் அந்த சிசுவின் முகத்தை முதல் முறையாக பார்க்க … அப்பப்பா மெய் சிலிர்க்கிறது …… இதில் ஒரு படி மேல் சென்று பேபி வெரோனிகாவின் சலனமில்லாத பார்வையால் நம்மை கட்டி போட்டு விடுகிறாள்…
கதையோ கற்பனையோ … ஒரு தாயின் உணர்வுகளை சரிவர கொண்டு வந்துள்ள இயக்குனருக்கு முதல் பாராட்டு. கருக்கலைப்பு செய்வது குற்றம் என்று தெரிந்தும் இன்றும் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு அழுத்தமான படம் தேவை தான்.
கடைசியாக ஒன்று , பெண்ணுரிமை பெண்ணுரிமை என தலைவிரி கோலமாக உலகையே இம்சித்து வரும் இத்தருணத்தில் எதற்கு பெண்ணுரிமை தேவை என திசை தெரியாமல் கால் போன போக்கில் போகும் பெண்களின் மத்தியில் நான் ஒரு பெண்ணின் உரிமையை மையப்படுத்தி கேட்டுக்கொள்கிறேன்
கருக்கலைப்பிற்கு அந்த அக்கருவை சுமக்கும் பெண்ணின் ஒப்புதலோடு சிதையுங்கள் .. இதற்கு தான் பெண்ணுரிமை முக்கியமாக தேவை .
“தியா” ஒவ்வொரு கருசிதைவிற்கும் உயிர் கொடுப்பவள்.
– பிரியா குருநாதன்