ஐபிஎல் – சென்னையை எளிதாக வென்றது மும்பை

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஏப்ரல் 28 அன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது.

இதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 169 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சென்னை அணியினரின் பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்டு ரன்களை சேர்க்க தொடங்கினர். இந்த ஜோடியின் சிறப்பான தொடக்கத்தால் முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி 9.5-வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் சுழலில் பிரிந்தது.

ஹர்பஜன் வீசிய சுழற்பந்தை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் (44 ரன்கள்) ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் சர்மா, எவின் லெவிஸுடன் கை கோர்த்தார்.

சென்னை அணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்ட இவர்கள், மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய வெற்றியின் மூலம் பழி தீர்த்து கொண்டது.

Leave a Response