
தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள பழநியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசே முன்னின்று நடத்தும் இம்மாநாட்டையொட்டி பழனி கோயில் வழிபாடு – உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள் என்கிற சிறு நூலினை விற்பனை செய்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….
ஆகஸ்ட் 24,25 ஆகிய தேதிகளில் அதாவது இன்றும் நாளையும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின்
சார்பில் “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை” பழநியில் நடத்துகிறார்கள்.
இதை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழக இணையதளப் பிரிவின் சார்பில் சிறப்பு வெளியீடாக
“பழனி கோயில் வழிபாடு” – ‘உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்’ எனும் நூல் சலுகை விலையில் வழங்குவதற்காக அச்சிடப்பட்டுள்ளது.
முதல் பதிப்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த நூல் தற்போது சலுகை விலையில் வெறும் 10 ரூபாய்க்கு மாநாடு நடக்கும் இரண்டு நாள் மட்டும் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்நூலில், தமிழர்கள் வசம் இருந்த பழனிக் கோயில் பார்ப்பனர்கள் வசம் பறிபோன வரலாறு என்ன?
அதை மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள் என்ன?
இது குறித்து பழனி திருபோகநாதர் ஆதினம் தவத்திரு சிவானந்த புலிப்பாணி அடிகளார் கூறுவது என்ன?
போன்ற செய்திகள்தான் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க எடுக்கும் முன்னெடுப்புக்கு வலுச் சேர்க்கும் இம்முயற்சியை ஏன் எதிர் நடவடிக்கையாகக் கருதுகிறார்கள்?
ஆரியக் கற்பனைக் கதைகளை நம்பி ஏற்றுக் கொண்டிருக்கும் கடவுளர்களுக்கு மேலாக, மாற்றாக முத்தமிழ் முருகனை பரிந்துரைக்கும் தமிழ்நாட்டரசின் அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சிக்கு எதிரான – தமிழ் முருகனுக்குத் தமிழர்களே வழிபாடு செய்துவந்த நிலையை மாற்றி, ஆரியர்களின்,ஆரியமொழி வழிபாட்டைத் திணித்ததை மாற்றி, மீண்டும் தமிழர்களின் வழிபாட்டை, தமிழ் வழிபாட்டைக் கோரும் இந்நூலினை ஏன் தடுக்க விரும்புகிறார்கள்?
புரியாத புதிரா? புரிந்து கொள்ள முடியோதோரின் செயலா?
இப்போதாவது புரிந்து கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தோழரை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம்.
— கொளத்தூர் மணி,தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
24.08.24
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


