அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காலையில் மெரினா கடற்கறையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச்சென்றவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
மக்கள் விடுதலை அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்களோடு இந்நிகழ்வில் பங்குகொள்ள வந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன், வ.கீதா, பேராசிரியர்கள் வீ.அரசு, மங்கை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது நடவடிக்கைக்கு பலத்த கண்டனங்கள் வருகின்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில்,,,,,
காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற தோழர்கள் கைது !
கோட்சே வாரிசுகள் ஆளும் நாட்டில் காந்தி தீவிரவாதி ஆக்கப்பட்டுள்ளார்.
காவி அடிமை எடப்பாடி இந்திய நாட்டின் தந்தை என சொல்லப்படும் காந்தியை அவமதித்திருக்கிறார்.
காந்தியை தேசத்தந்தை என்று இந்திய அரசு அறிவித்தாலும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியின் காவல்துறைக்கு காந்தி ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு – காந்தியைக் கொன்ற மதவெறி சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மாலையிட வந்த இளைஞர்களை காவல்துறை தடுத்து கைது செய்து விட்டது.
“தேசத்தந்தைக்கு இதை விட வேறு சிறந்த மரியாதையை எப்படி காட்ட முடியும்?”
நாட்டின் “சுதந்திர” த்திற்கு பிறகு காந்தி சிலைக்கு அவர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க தடைவிதித்த ஒரே மாநிலம் “தமிழ்நாடு” என்ற கின்னஸ் சாதனையை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது.
இப்படி ‘தேசபக்தியுடன்’ முடிவெடுத்த காவல்துறையினருக்கு ‘சுதந்திரதின’ விழாவிலோ, ‘குடியரசு தின’ விழாவிலோ சிறந்த சேவைக்கான வீர விருதை வழங்கி இந்தியாவின் தேசபக்தியை உலகத்துக்குக் காட்டிக் கொள்ளலாம்.
“காந்திக்கு ஜே”
காந்தியை அவமதித்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் டபுள் “ஜே”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.