வயநாடு பேரிடரிலும் பொய் சொன்ன அமித்ஷா – பினராயிவிஜயன் தகவல்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

இந்நிகழ்வு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.அப்போது அவர் கூறியதாவது….

வயநாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை உதவி கோரப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையினர் உட்பட 1,257 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

நிலச்சரிவில் சிக்கிய 1,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணிகள் உட்பட 8,017 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30 ஆம் தேதி மாலைதான் சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டது.

கேரளாவுக்கு மழை எச்சரிக்கை சரியான நேரத்தில் விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் கேரளா என்ன செய்து கொண்டிருந்தது என்றும் மேலவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான தகவல் ஆகும். கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டிருந்தது.நிலச்சரிவு ஏற்பட்ட அன்று காலை 6 மணிக்குத் தான் சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டது. ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 24 மணி நேரத்தில் 115 முதல் 204 மிமீ மழை தான் பெய்ய வேண்டும். ஆனால் 48 மணி நேரத்தில் 512 மிமீ மழை பெய்தது. நிலச்சரிவு குறித்து தகவல் தரும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையும் எந்த எச்சரிக்கையும் தரவில்லை. அவர்கள் பச்சை எச்சரிக்கை மட்டுமே அறிவித்திருந்தனர். எனவே பேரழிவு நடந்துள்ள இந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் கூறுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. மீட்புப் பணிகளுக்குத் தான் முதல் முக்கியத்துவம் தர வேண்டும்.

வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணத்துக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. நிவாரண பணிகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மக்கள் தாராளமாக வழங்கவேண்டும். பணமாக அளிப்பவர்கள், கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பொருளாக அளிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பயன்படுத்திய பழைய பொருட்களை தரவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response