பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில், 2009 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல, பஞ்சாப் மாநில அரசு, 2006 ஆம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி, மஜாபி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இதை எதிர்த்து பஞ்சாப் – ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது’ என்று அந்த நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குடன், தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கும் இணைக்கப்பட்டது.
தமிழ்நாடு, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களின் உள்ஒதுக்கீடு தொடர்பான 23 வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன. முதலில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து 2020 ஆகஸ்டில் தீர்ப்பளித்தது.
இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்பதால், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகிய 7 பேர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.
பஞ்சாப் மாநில அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். எதிர் மனுதாரர் தேவேந்தர் சிங் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மனோஜ் ஸ்வரூப், சாலில் சாகர், கே.எஸ்.சவுகான், சஞ்சய் ஹெக்டே, சாகட் சிங் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
ஒன்றிய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். ‘‘இடஒதுக்கீட்டுக்கான நோக்கத்தை, உள்ஒதுக்கீடு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் சமூகங்களுக்கு சம வாய்ப்பை அளிக்க உள்ஒதுக்கீடு வகை செய்கிறது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், பிப்ரவரி 8 ஆம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று (ஆகஸ்ட் 1,2024) தீர்ப்பு வழங்கியது.
பட்டியலின, பழங்குடியினருக் கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இருக்கிறது என்று 6 நீதிபதிகள் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பளித்தனர். மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நீதிபதி பெலா எம்.திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதையடுத்து, பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கியது இறுதி தீர்ப்பாக ஏற்கப்பட்டது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது…..
2000 ஆம் ஆண்டில் ஆந்திராவில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர அரசு – இ.வி.சின்னையா இடையிலான வழக்கை 2005 ஆம் ஆண்டில் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு, ஆந்திர அரசின் உள்ஒதுக்கீட்டை இரத்து செய்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே பஞ்சாப் மாநில அரசின் உள்ஒதுக்கீடு சட்டத்தை, மாநில உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.
இ.வி.சின்னையா வழக்கில் சட்டப் பிரிவு 341-ன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த சட்டப் பிரிவு, இடஒதுக்கீட்டுக்கான சாதிகளை அடையாளம் காண மட்டுமே வழிவகை செய்கிறது. எனவே,2005 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரத்து செய்யப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனினும், உரிய ஆய்வுகளுக்குப் பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம், பஞ்சாப் அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் ஆகியன செல்லும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டை மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
என்று கூறியிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் சுன்ன பெண்டா எனும் இடத்தில் ‘நம் நீர் – நம் வளம்’எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,
எஸ்.சி. உட்பிரிவு இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இந்த ஜனநாயக நாட்டில் அனைத்து பிரிவினருக்கும் சம நீதி கிடைத்திட வேண்டும் என்பதே தெலுங்கு தேசம் கட்சியின் கொள்கையாகும்.
என்று கூறியிருக்கிறார்.
ஒன்றிய அரசுக்கெதிரான ஒரு தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுப் பேசியிருப்பது வியப்பில்லை ஆளும் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு வரவேற்றிருப்பது ஆச்சரியம்தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.