ரூ 500 ரூ 200 பணத்தாள்கள் இரத்து – சந்திரபாபு பேச்சுக்கு எதிர்ப்பு

ஆந்திர மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 227 ஆவது எஸ்.எல்.பி.சி கூட்டத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான ரூ.5,40,000 கோடி கடன் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது…

டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதல் மூன்று மாநிலங்களில் ஆந்திர அரசு உள்ளது. அதனை முதல் இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். வங்கிகளும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் ஊழலைக் குறைத்து உற்பத்தி பெருக்கலாம். நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை அகற்ற பிரதமர் மோடி அரசு 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்றது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரூ.2000 நோட்டுகள் கொண்டு வரப்பட்டு, அதன் பிறகு அவற்றையும் இரத்து செய்தது.

கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் அரசு நிர்வாக சிஸ்டத்தை வாங்கப் பார்க்கின்றனர். அவர்களின் ஊழலைத் தடுக்க ரூ.500, ரூ.200 நோட்டுகளை இரத்து செய்து டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்று ரூ 1000, ரூ 500 பணத்தாள்களை செல்லாது என்று அறிவித்த மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்தது.அதனால் ஏராளமானோர் உயிரிழந்ததும் பட்டினியோடு பராரி போல் அலைந்ததும்தான் மிச்சம் என்று பொருளாதார அறிஞர்கள் ஏராளமான சான்றுகளுடன் விளக்கிச் சொல்லிவிட்டனர்.
அதன்பின்னும் அது நல்ல திட்டம் என்பது போலப் பேசியிருக்கும் சந்திரபாபு, இப்போது இருக்கும் 500 மற்றும் எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் 200 ரூபாய் தாள்களையும் இரத்து செய்யவேண்டுமென பேசியிருக்கிறார்.

எளிய மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அவர் அம்மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இப்படிப் பேசியிருப்பதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Leave a Response