மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு, மே 5 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.
இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும், 1.563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை இரத்து செய்வதாகவும், அவர்களுக்கு 23 ஆம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 27 பேரின் தேர்வுத்தாள்களில பதில் எழுதித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 இலட்சம் பேரம் பேசியுள்ளனர். மேலும், அதற்காக ரூ.2.30 கோடிக்கான காசோலை கைமாறியதாகவும் கோத்ரா மாவட்ட ஆட்சியருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விசாரணை நடத்த கோத்ரா தாலுகா காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்வு மையமாக இருந்த பள்ளியின் முதல்வர் புருஷோத்தம் சர்மா உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இத்தகவலை கோத்ரா காவல்துறை கண்காணிப்பாளர் இமான்சு சோலங்கி தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து,நீட் தேர்வே மோசடியானது அதிலும் தொடர் மோசடிகள் நடக்கின்றன என்று ஆண்டுதோறும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது புலனாகிறது என்று சமுதாய ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.