88 தொகுதிகளில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு – இன்று நடக்கிறது

ஏழு கட்டங்களாக 18 ஆவது மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களிலுள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா – 20, கர்நாடகா- 14, இராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிகார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்க இருந்தது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதால், அங்கு வாக்குப்பதிவுமே 7 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 1,098 ஆண்கள், 102 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

திருவனந்தபுரம் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர், காங்கிரசு மூத்த தலைவர் சசி தரூர், இராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஜோத்பூர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங், கரண் சிங் (காங்கிரசு), பார்மர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினி, மீரட் தொகுதியில் ‘இராமாயணம்’ தொலைக்காட்சி தொடரில் இராமராக நடித்த அருண்கோவில் (பாஜக), கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரும் இன்றைய தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.

இன்று காலை 7 மணி முதல் இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Response