இரண்டாம்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்கள்

18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஏப்ரல் 19 அன்று, 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு நேற்று 2 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), இராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) என 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் 2 ஆம் கட்டத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.

ஆனால் மத்தியபிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. எஞ்சிய 88 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதில், 63.50 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2 ஆம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 3 ஆம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Leave a Response