இரட்டை இலை சின்னம் முடக்கம்?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிய அளவில் அரசியல் கட்சிகளின் அணிச்சேர்க்கை தீவிரமாக நடந்துவருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, எடப்பாடி அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்குக் கிடைக்கும்? என்கிற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.

எடப்பாடி அணியில் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் கே.பிமுனுசாமியிடம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

எங்களை எப்படியாவது அவர்கள் (பாஜக) பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். நாங்கள் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். நாங்கள் சுயமரியாதையுடன் நின்று கொண்டிருப்பதால், எங்களைப் பயமுறுத்தி இழுக்கமுடியாது.இதுபோன்ற வழக்குகள் யாரால் பதிவு செய்யப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியும். அதை முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சின்னமும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரும் இருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது என்றார்.

அதேசமயம், உசிலம்பட்டியில் ஓபிஎஸ் அணி சார்பில் தேனி பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஓபிஎஸ் அணி மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளோம்.மனு மீதான நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கும் அவர் தேனி தொகுதியில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் அனைத்து வழக்குகளிலும் ஓபிஎஸ் வெற்றி பெறுவார். இரட்டை இலை சின்னம் முடங்காது. அது நிச்சயம் ஓபிஎஸ் கைக்குத் தான் வரும். இரட்டை இலை சின்னம் மூலம் போட்டியிடுவோம் என்றார்.

இதனிடையே, நேற்றிரவு பாஜகவினருடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தைக்குப் பின், இரட்டை இலை சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.

இதனால் ஒன்றியத்தை ஆளும் பாஜகவினர்,எடப்பாடி பழனிச்சாமி அணியை பலமிழக்கச் செய்ய இரட்டை இலையை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குக் கிடைக்கும்படி செய்வார்கள் அல்லது இரட்டைஇலை சின்னத்தையே முடக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

என்ன நடக்கப் போகிறது? பார்ப்போம்.

Leave a Response