கவிஞர் வண்ணதாசன் எழுத்தாளர் ஜோடி குருஸ் உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கு வீடு – மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 தமிழறிஞர்களுக்குக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் 2 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனுமதி ஆணைகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்ச் 8 அன்று தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ. தர்மராஜ், முனைவர் மா.இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன், பொன்.கோதண்டராமன்,சு.வெங்கடேசன், ப.மருதநாயகம்,
மரு.முனைவர் இரா.கலைக்கோவன், எஸ்.இராமகிருஷ்ணன், ஆர்.என்.ஜோ.டி.குருஸ்,சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு அரசாணைகளையும் ம.இராசேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய அறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனுமதி ஆணையினையும் வழங்கினார். மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

கனவு இல்லத் திட்டம் மறைந்த முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதமி விருது, முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலமாக வீடு வழங்கப்படும் என்ற கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.

கனவு இல்லத்திட்டத்தின் முதற்கட்டமாக 3.6.2022 அன்று பேரா.முனைவர் கு.மோகனராசு, ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், இமையம் என்கிற வெ.அண்ணாமலை, இ.சுந்தரமூர்த்தி மற்றும் கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன் ஆகிய ஆறு அறிஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கனவு இல்லத்துக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.

இவர்களுள் கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதனுக்கு 03.05.2023 அன்றும், ந.செகதீசன் (ஈரோடு தமிழன்பன்), பூமணி (பூ.மாணிக்கவாசகம்), இமையம் என்கிற வெ.அண்ணாமலை, இ.சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு 24.05.2023 அன்றும் பேரா.முனைவர் கு.மோகனராசுக்கு 30.05.2023 அன்று கனவு இல்லத்துக்கான திறவுகோலும் வழங்கப்பட்டது.

கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2021-2022 ஆம் ஆண்டுக்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ.தர்மராஜ், முனைவர் மா.இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் ஆகிய மூவருக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கு பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், மரு.முனைவர் இரா. கலைக்கோவன்,
எஸ்.இராமகிருஷ்ணன், ஆர்.என்.ஜோ.டி.குருஸ்,சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து அறிஞர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு அரசாணைகளையும், 2023-24ஆம் ஆண்டுக்கு
ம.இராசேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய அறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனுமதி ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.

கலைஞர் எழுதுகோல் விருது: “சமூக மேம்பாட்டுக்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டுக்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விருதுடன் 5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்
மரு.இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response