மோடிக்கு ஓட்டுக் கேட்டதற்காக ரொம்ப வருத்தப்படுறேன் -மனம் வருந்தும் ஜோ டி குரூஸ்

எழுத்தாளர் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’,சாகித்ய அகாடமி விருதை வென்ற ‘கொற்கை’ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது நாவலான ‘அஸ்தினாபுரம்’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக தமிழகம் வந்த மோடியுடன் ஒரே மேடையில் ஏறி அவருக்காகப் பேசிய ஜோ டி குரூஸ் வெகுவிரைவில் மோடியின் விமர்சகராகவும் மாறிவிட்டார்.அண்மையில், ‘தி இந்து’ நூல்வெளிக் குழுவினரோடு உரையாடினார். அதிலிருந்து ஒரு பகுதி,

மக்களைவைத் தேர்தலின்போது மோடியைத் தீவிரமாக ஆதரித்தவர் நீங்கள். மூன்றாண்டு மோடியின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மையைச் சொல்லணும்னா மோடி மேல எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஒரு சாதாரண அடித்தட்டு குடும்பத்திலிருந்து மேல வந்திருக்கிற அரசியல் தலைவர். அதுவும் மாநில முதல்வரா இருந்து எத்தனையோ போட்டிகளுக்கு மத்தியில தேசிய அரசியல் நோக்கி, அதுவும் பிரதமர் பதவி நோக்கி வர்றார். மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையிலே இருந்த சிக்கல், பிரச்சினை எல்லாம் தெரிஞ்சு வர்ற மனுஷன் பெரிய மாற்றங்களை உண்டு பண்ணுவார்னு மனப்பூர்வமா நெனைச்சேன். இந்த மூணு வருஷத்துல என்னோட எதிர்ப்பார்ப்புகள் படுகுழியில போயிடுச்சுங்கிறதை மனப்பூர்வமா ஒப்புக்கிறேன். அதுவும் நாடு போய்க்கிட்டிருக்குற சகிப்பின்மைப் பாதையைப் பார்க்குறப்ப மோடிக்கு ஓட்டு கேட்டதுக்காக ரொம்ப வருத்தப்படுறேன். அப்புறம், நானும் ஏமாந்துட்டேன்.

என் வேலை சார்ந்து, குஜராத்துக்குப் பல முறை போயிருக்கேன். அப்போலாம் துறைமுக நகரங்களை நோக்கிப் போகையில, அங்கே இருந்த சாலைகளைப் பார்த்து பிரமிச்சுருக்கேன். இந்த வளர்ச்சி ஊர்லேயும் இல்லைனு நெனைச்சுருக்கேன். இதுதான் உண்மையான குஜராத்துன்னு நெனைச்சுருக்கேன். ஆனா, அது உண்மையான குஜராத் இல்லைங்கிறதைப் பின்னாடி, ஒரு வருஷம் முந்தி குஜராத் முழுக்க ஒரு பயணம் போனப்போ உணர்ந்துக்கிட்டேன். அடித்தள மக்களோட வாழ்க்கை ரொம்ப மோசமா இருக்கு, குறிப்பா மீனவ மக்கள் வாழ்க்கை. அதையெல்லாம் பார்த்துட்டு இங்கே திரும்புனா நம்மூர் எவ்வளவோ மேல நிக்குது. எனக்கொண்ணும் இதைச் சொல்றதுல வெட்கம் இல்ல. மக்களுக்கு நல்லது நடக்கும், நாட்டுக்கு நல்லது செய்வார்னு நெனைச்சு மோடியை ஆதரிச்சேன், நான் மட்டும் இல்ல; பல கோடி பேர் அப்படி நெனைச்சாங்க. அது நடக்கலைங்கிறப்போ, உண்மையை ஒப்புக்குறதுல ஒண்ணும் தப்பில்லையே!

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response