2 இலட்சம் 2 ஆயிரம்கோடி என்று சொல்லப்பட்டது – ஜாபர்சாதிக் சிக்கலில் திடீர்திருப்பம்

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் ஒழிப்பு குழு ஒன்று தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பள்ளி, மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு முகாம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு புத்தகத்தையும், விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பது, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தேவையைக் கட்டுப்படுத்துவது போன்ற 2 வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கஞ்சா பயன்படுத்துபவர்கள், போதை மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். போதை மாத்திரைகள் விற்பனையையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மருந்துக் கடைகள் மூலம் போதை மாத்திரைகள் விற்பனையைக் கண்டறிந்து 900-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடைகளின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது போதைப் பொருள் ஒழிப்பு, அதன் பயன்பாடு மற்றும் தேவையைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமிழ்நாடு முதல்மாநிலமாக உள்ளது.

மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினர், வருவாய் புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, கடலோரக் காவல்படை போன்ற மத்திய அமைப்பினருக்கும் போதைப் பொருளை ஒழிப்பதில் பெரும் பங்குஉள்ளது. அவர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியிலான புலனாய்வுத் தகவல்கள் அதிகம் கிடைக்கும்.

பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதை அவர்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு காவல்துறையினரைப் பொறுத்தவரை கடைசியாக தெருக்கள் வரை விற்கப்படும் போதைப்பொருளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம்.

தமிழ்நாடு காவல்துறையினர் அதிகளவில் போதைப் பொருளைக் கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதைப் பொருள் வழக்குகளில் 100 பேர் கைது செய்யப்பட்டால், அவர்களில் 80 பேருக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தருகிறோம்.அதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

ஜாபர் சாதிக் விவகாரம் குறித்து அவர் கூறியதாவது….

நான் ஒரு அரசாங்க அதிகாரி. பொதுவான கருத்துகளை வெளியிடும் அரசியல்வாதிகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. ஒரு நபர் (ஜாபர் சாதிக்) பிடிபட்டதை வைத்து ஒட்டுமொத்தக் காவல்துறையையும் குறைசொல்வது தவறு. குறிப்பிட்ட அந்த நபரை (ஜாபர் சாதிக்) நான் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளேன்.

சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு உதவி செய்த வங்கி உள்ளிட்ட அதிகாரிகளும்,பல்வேறு நன்கொடையாளர்களும் அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அந்த நபர். தற்போது அந்த நபர் நன்கொடையாகக் கொடுத்த 10 சிசிடிவி கேமராக்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, 10 புதிய கேமராக்களை நாங்களே பொருத்தி உள்ளோம்.

அந்த நபரை கைது செய்வதற்கு மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினரிடம் இருந்தோ, டெல்லி காவல்துறையினரிடமிருந்தோ தமிழ்நாடு காவல்துறையிடம் எந்த உதவியும் கோரப்படவில்லை. டெல்லியில் 50 கிலோ போதைப் பொருள் (மூலப்பொருள்) தான் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மதிப்பு ஒரு கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியெனில் அதன் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், ரூ.2 ஆயிரம் கோடி என்று தவறான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட அந்த நபர் மீது (ஜாபர்சாதிக்) சென்னை காவல்துறையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டில் அவர் மீது பதியப்பட்ட வழக்கில் விடுதலையாகி இருக்கிறார். போலி பாஸ்போர்ட் வழக்கில் 2021 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இல்லை.

இவ்வாறு டிஜிபி கூறினார்.

முன்னதாக அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கூறியதாவது….

போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2022 ஆம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2023 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 14,770 பேர் மீது மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,364 கிலோ கஞ்சா, 0.953கி.கி. ஹெராயின், 39,910 மாத்திரைகள் மற்றும் 1,239 கி.கி. மற்ற போதைமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடப்பு ஆண்டில், 2024ஜனவரி வரை 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 1,501 போதைப் பொருள் குற்றவாளிகள் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு காவல்துறைத் தலைவரின் இந்தப் பேட்டி மூலம், சுமார் இரண்டு இலட்சம் மதிப்புள்ள பொருட்களை இரண்டாயிரம்கோடி என்று ஒன்றிய அமைப்புகளும் டெல்லி காவல்துறையும் பரப்பிவிட்டது வெளிப்பட்டிருக்கிறது.
இது இச்சிக்கலில் திடீர் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Response