மோடி அரசின் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் கொலைகாரத் திட்டம் – கிவெ காட்டம்

இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,இன்று 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.

அது, மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிவெட்டு, பெண்கள் மீது கட்டாயத் தடுப்பூசித் திணிப்பு ஆகியன உள்ளிட்ட
மோடி அரசின் மக்கள் பகை நிதிநிலை அறிக்கை என்று தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பளபளப்பான அறிவிப்புகள், உற்றுப் பார்த்தால் ஏழை எளிய மக்கள் மீதான நிதித் தாக்குதல்கள், பொருளியல் வளர்ச்சி – வேலைவாய்ப்பு வளர்ச்சி – வறுமைக் குறைப்பு ஆகிய அனைத்து முனைகளிலும் பெருவீழ்ச்சி, பெண் குழந்தைகளுக்கு எதிரான மிகக் கொடிய திட்ட அறிவிப்பு – இதுதான் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள், முன்வைத்த 2024 – 2025க்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம்!

இந்தக் கூட்டத் தொடரின், தொடக்க நிகழ்ச்சியான நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மோடி அமைச்சரவை தயாரித்துக் கொடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் படித்த மோடி ஆட்சியின் பத்தாண்டு “சாதனைக்” கூக்குரல்தான் நிர்மலா சீத்தாராமனின் 57 நிமிட பட்ஜெட் உரையிலும் இருந்தது.

சிறப்பாகச் செயல்பட்டு, நிதிப் பற்றாக்குறையை 5.8% ஜி.டி.பி.யாக, அதாவது நிதி வருவாய்க்கும் நிதிச் செலவுக்கும் உள்ள பற்றாக்குறையை 21.66 இலட்சம் கோடி ரூபாயாகக் குறைத்து விட்டோம் என நிர்மலா சீத்தாராமன் மார்தட்டிக் கொண்டார். தங்களது ஆட்சியின் சிறப்பான நிதி நிர்வாகத்தை இது எடுத்துக் காட்டுகிறது என மோடி புகழ்ந்துரைத்தார்.

ஆனால், மேற்சொன்ன நிதிப் பற்றாக்குறைக் குறைப்பு எப்படி நிகழ்ந்திருக்கிறது என்று பார்த்தால், மக்களை அடித்து நிதியை சேமித்து செலவைக் குறைத்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியும்.

அரசின் கடன், கடந்த ஆண்டில் மட்டும் 14 இலட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது. முதன்மை வருவாய் வழியாக கடன் தொகையே வருகிறது (28%).

மறுபுறம், செலவைக் குறைப்பதற்கு மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அனைத்து முனையிலும் வெட்டியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 2023 – 24ஆம் ஆண்டு, வரவு செலவு அறிக்கையில், கல்விக்கான நிதி ஒதுக்கீடு 1,16,417 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திருத்திய மதிப்பீட்டில் கல்விக்கான ஒதுக்கீடு – 1,08,878 கோடி ரூபாய் எனப் பெருமளவு வெட்டப்பட்டுள்ளது. அதேபோல், உடல் நலவாழ்வுத் திட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட 88,956 கோடி ரூபாயில், ஏறத்தாழ 10,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.

பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக, கடந்த பட்ஜெட்டில் 9,409 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அறிவித்தார்கள். ஆனால், உண்மையில் அது 6,780 கோடியாக சுருங்கி விட்டது.

எதிர்கால வளர்ச்சிக்காக சாலை விரிவாக்கம், தொழில் துறை மற்றும் வேளாண்மைத் துறை விரிவாக்கம், தொடர்வண்டித் துறை போன்ற மூலதனச் செலவுக்காக, சென்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10 இலட்சம் கோடி ரூபாய் என்பது, உண்மையில் 9.5 இலட்சம் கோடி ரூபாயாக சுருங்கி விட்டதென்றும், இந்தத் தொகையிலும் கணிசமானவை செலவிடப் படவில்லை என்றும், நிதியமைச்சரின் அறிக்கையிலிருந்தே தெளிவாகிறது.

இவ்வாறு, மக்கள் நலத் திட்டங்களை வெட்டிக் குறைத்து, பற்றாக்குறையைச் சரி செய்திருக்கிறார்கள்.

மறுபுறம், ஜி.எஸ்.டி. வரி வசூல் சென்ற ஆண்டை விட அதிகரித்திருக்கிறது என சாதனைப் பட்டியல் நீட்டினாலும், மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்குத் தொகையை பெருமளவு வெட்டிக் குறைத்துதான் இந்திய அரசின் ஜி.எஸ்.டி. வருவாயை உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

இவை போதாதென்று, பெண் குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான திட்டம் என்ற பெயரில், இந்திய நிதியமைச்சர் அறிவித்திருக்கிற புதிய தடுப்பூசித் திட்டம் – மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது.

நாடு முழுவதும் உள்ள 9 வயதிலிருந்து 15 வயதிற்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் கருப்பை (கர்ப்பப்பை) புற்றுநோய்த் தடுப்பு தடுப்பூசித் திட்டம் என்ற ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, இந்திய அரசே வெளியிட்ட குடும்ப நல ஆய்வறிக்கையின்படி 55 வயதிற்கு மேற்பட்ட இந்தியப் பெண்களில் 0.0147% பெண்களுக்குத்தான் கருப்பைப் புற்றுநோய்க்கான வாய்ப்புள்ளது என இதே இந்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில், வளர்ந்த பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் வருவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கட்டாயத் தடுப்பூசி போடப் போவதாக அறிவித்து, அதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்திருக்கிறார்கள்.

“சீரம் இந்தியா” என்ற மருந்து நிறுவனத்தின் தயாரிப்பான ”செர்வவாக்” (CERVAVAC) தடுப்பூசியை எல்லா பள்ளிப் பிள்ளைகளுக்கும் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் சுற்றறிக்கை, கடந்த வாரமே மராட்டிய அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

ஏற்கெனவே 2008 ஆம் ஆண்டு, ஆந்திரா – குசராத் ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில், பெண் பிள்ளைகளுக்கு இந்தக் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, மெர்க் (Merck) என்ற செர்மனி நாட்டு மருந்து நிறுவனத்தின் கார்டாசில் (GARDASIL) என்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிற செர்வவாக், கார்டாசிலை விட தரம் குறைவானது.

இத்தடுப்பூசியின் விளைவாக ஆந்திராவிலும், குசராத்திலும் 2008 ஆம் ஆண்டு 12 சிறுமிகள் மரணமடைந்தார்கள். பல பேருக்கு கருப்பை வாய்ப் புண் மற்றும் புதிய வகை புற்றுநோய் ஆகியவை ஏற்பட்டன. அன்றைக்கு இந்திய நாடாளுமன்றத்தில், அது பெரும் புயலைக் கிளப்பியது. அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக்குழு, 2011 பிப்ரவரியில் விசாரணை அறிக்கையை முன்வைத்தது.

தடுப்பூசி தயாரித்த மருந்து நிறுவனமும், அதனை மக்களிடம் கொண்டு செலுத்திய பாத் (PATH) என்ற தொண்டு நிறுவனமும் இந்திய அரசின் மருத்துவக் கழகம், தலைமை மருந்து ஆய்வகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் துணையோடு, பட்டியல் சாதி – பழங்குடியின பெண் குழந்தைகள் மீது எவ்வளவு பெரிய உடல் தாக்குதலை நடத்தி, மரணத்தையும் நோயையும் ஏற்படுத்தி, கொள்ளை இலாபம் அடித்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வறிக்கை (Report of the Committee appointed by the Govt. of India – “Alleged irregularities in the conduct of studies using Human Papilloma Virus (HPV) vaccine” by PATH in India, February 15, 2011) வெளிப்படுத்தியது. (காண்க : https://main.icmr.nic.in/sites/default/files/reports/HPV_PATH_final_report.pdf)

வயதில் பெரிய பெண்களுக்குச் சோதனை செய்து பார்ப்பதற்கு முன்னால், சிறுமிகள் உடலில் சோதனை செய்யக் கூடாது என்ற அடிப்படை மருத்துவ விதி வேண்டுமென்றே மீறப்பட்டிருக்கிறது. இத்தடுப்பூசித் திட்டத்தில், அரசுக்கும், மருந்து நிறுவனத்திற்கும், மக்களுக்கும் இடையே நல்லெண்ண அடிப்படையில் பாலமாகச் செயல்பட்டிருக்க வேண்டிய “பாத்” என்ற தொண்டு நிறுவனம், கொள்ளை இலாப மருந்துக் கம்பெனியின் கையாளாகவே செயல்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், இந்திய மருந்து ஆய்வகம் ஆகிய உயர் நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகளே இதற்குத் துணை போயிருக்கிறார்கள்.

தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னால், அதன் நன்மை தீமைகளை குழந்தைகளின் பெற்றோருக்குப் புரியும்படியாக விளக்க வேண்டும் என்ற சட்டநிலை முற்றிலுமாக மீறப்பட்டது. பல இடங்களில் பெற்றோர் அனுமதி பெறாமலேயே சிறுமிகளின் பள்ளி விடுதி காப்பாளருடைய கையொப்பம் பெறப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற ஆய்வுக்குழு, உரிய சட்ட விதிகளையும் மருத்துவ அறநெறிகளையும் (Medical Ethics) கடைபிடிக்காமல், இனி தடுப்பூசித் திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது, பாத் என்ற நிறுவனத்தை இனி இந்தியாவுக்குள் எந்த நலத் திட்டத்திலும் அனுமதிக்கக் கூடாது, அந்த அமைப்பின் மீது அமெரிக்க நாட்டில் வழக்குத் தொடுக்க இந்திய வெளியுறவுத்துறை உரிய வழிமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

இப்போது, நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருக்கிற தடுப்பூசித் திட்டம் எப்படி செயல்படும் என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே கொரோனா தடுப்பூசியில் நடந்ததைப் பார்த்திருக்கிறோம். தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும், பெற்றோரை மிரட்டி பிள்ளைகள் தேர்வுக்கு அமர முடியாது என்ற நிர்பந்தத்தை உருவாக்கி, கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை, பள்ளிப் பிள்ளைகளிடையே செயல்படுத்தியதை பார்த்தோம். இதேநிலை தான், கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசி என்ற இந்தத் திட்டத்திற்கும் ஏற்படும்.

இந்தக் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு (கல்பனா மேத்தா – எதிர் – இந்திய ஒன்றிய அரசு – Kalpana Mehta And Ors. vs Union Of India And Ors. on 9 May, 2018) இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற ஆய்வுக்குழு அரசுக்கு அளித்த அறிக்கையை அடிப்படையான ஆவணமாகக் கொள்ளலாம் என 2018 இல் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், இத்தடுப்பூசிக்கு எதிரான – உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் ஆய்வறிக்கையைப் பற்றி, சற்றும் கவலைப்படாமல் மீண்டும் அதே தடுப்பூசித் திட்டத்தை இந்தியா முழுவதுமுள்ள பெண் குழந்தைகளின் மீது திணிப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும்!

தேர்தல் வரக்கூடிய நேரத்தில், மருந்துக் குழுமங்களிடம் பல கோடி ரூபாய் பணம் பெறுவதற்காக மோடி அரசு, இந்தக் கொலைகாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதற்கு, நிதி மசோதா என்ற சட்ட அரணைப் பெறுவதற்கு பட்ஜெட் வழியாக அறிவிக்கிறது.

இந்தக் கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை மோடி அரசு முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடு – புதுவை அரசுகள், தங்கள் மாநிலங்களிலுள்ள பள்ளிப் பிள்ளைகள் மீது இந்தத் தடுப்பூசித் தாக்குதலைச் செயல்படுத்த மறுக்க வேண்டும்!

மொத்தத்தில், மோடி ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை – முற்றிலும் மக்கள் பகையானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response