தமிழ்நாட்டை மறக்காதீர்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலகத் தமிழர் தினம்-2024 விழா சென்னை வர்த்தக மையத்தில சனவரி 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது…..

இந்த மாநாட்டுக்குக் கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் இங்கு வந்திருப்பது. அவர் உலகப்புகழ்பெற்ற தமிழர் மட்டுமல்ல, உலகமே கவனிக்கும் பதவியில் இருக்கும் தமிழர் அவர். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது நான் தங்கிய இடத்துக்கே வந்து சிறப்பு செய்தார்.நேற்று அவரை என்னுடைய வீட்டுக்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும், என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன். அவரைப் போன்று இந்த மேடையில் உலகம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கக்கூடிய அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் மனதார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். அனைவரின் வருகைக்கும் நன்றி.

அயலகத் தமிழர் நலனுக்குத் தனியாக ஒரு துறையை உருவாக்கி, தனி அமைச்சரையும் நியமித்து உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் உள்ள நிரந்தர குடியுரிமை உள்ள தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கி தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தமிழ் கற்றுத்தரப்படுகிறது.வெளிநாடுகளில் கைது செய்யப்படும் சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ இயலாமை, மற்றும் பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படும் தமிழர்களை தாயகம் அழைத்து வரவும், அங்கு இறக்க நேரிட்டால் உடலை இந்தியா கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் ரூ.1 கோடி சூழல் நிதி ஏற்படுத்தப்பட்டு தமிழர்களின் துயரங்களைத் துடைக்கிற பணி உரிய முறையில் செய்யப்பட்டு வருகிறது.புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ‘எனது கிராமம் திட்டம்’ தொடங்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சேமிப்பை தமிழ்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி இவர்கள் முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏதுவான சூழ்நிலையையும் உருவாக்கி இருக்கிறோம். ‘வேர்களைத் தேடி’ திட்டத்தில்ஆண்டுதோறும் 200 இளைஞர்களை தேர்ந்தெடுத்து பண்பாட்டு சுற்றுலா அழைத்துக் கொண்டு போகிறோம்.அதன்படி 58 இளைஞர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து டிசம்பர் 27 முதல் ஜனவரி 10ம் தேதி வரை 15 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற கலை, இலக்கியம், பழம்பெரும் கட்டிடம், வணிகம், விடுதலைப் போராட்டத்தில் நமது பங்களிப்பு, ஆடை, அணிகலன் உள்பட தமிழர்களின் எல்லா மாண்புகளையும் பார்த்து வந்து, அவர்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டார்கள். எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.

எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழக மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது அதைவிட வேற என்ன வேண்டும் எனக்கு? நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.1000 வந்திருச்சு, பொங்கல் பரிசாக ரூ.1000 வந்திருச்சு, அரிசி, சர்க்கரை, கரும்பு வந்திருச்சு, வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் கிடைச்சிருச்சு…ஒரு மாதத்தில் முதலமைச்சரே ரூ.8 ஆயிரம் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்க தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்தச்சகோதரி. அவர் முகத்தில் பார்க்கிற மகிழ்ச்சிதான் எனக்கு ஏற்படுகிற உற்சாகமாக இருந்தது. எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப்பற்றி இருந்ததில்லை. எந்த சூழ்நிலையிலும் மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இது மாதிரி செய்திகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, உழைச்சிக்கிட்டே இருப்பேன் நான்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில்அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள், சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், மலேசிய துணை அமைச்சர் குலசேகரன், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம், பல்வேறு நாடுகளின் மேயர், தமிழக எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave a Response