இது 2055 ஆம் ஆண்டு.உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2024 என்று அழைக்கப்படுகிறது.
அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை வைத்து ஆண்டைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள் தமிழ் மூத்தோர்.
அதன்படி இன்று 2055 ஆம் ஆண்டு தொடங்குகிறது.
அதுபற்றிய விளக்கம்….
ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும் தமிழ்மரபு பற்றியதும் நடைமுறையில் உள்ளதும் ஆகும். ஆகவே நாள் என்பது இயல்பாகக் கதிரவன் தோற்றத்தையே தொடக்கமாகக் கொண்டுள்ளது.
கிழமை (வாரம்) என்பதும் கதிரவனில் இருந்தே தொடங்குகின்றது. கிழமையின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமையே.மாதத்தின் தொடக்கமும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டதே. திங்கள் வளர்தலும் தேய்தலும் ஆகிய, இரு பதினைந்து நாள் அடங்கிய, ஒளிப்பக்கம் (அமர பட்சம்), இருட் பக்கம் (கிருட்டிணபட்சம்) என்னும் இரு பக்கங்களால் ஆன, முப்பது நாட்களைக் கொண்டது ஒரு மாதம் என்னும் அளவீடு, திங்களை அடிப்படையாகக் கொண்டதே ஆயினும், மாதம் என்னும் சொல்லும் மதியான் வந்தாய் இருப்பினும் மாதத்தின் தொடக்கம் திங்களின் அடிப்படையில் அமைந்ததன்று. அப்படி அமைந்திருப்பின் காருவா (அமாவாசை) நாளே மாதத் தொடக்கமாக அமைந்திருக்கும். கதிரவன் ஓரைக்குள் புகுந்துசென்று வெளியேறுங்காலம் முப்பது நாள் கொண்டதாய் இருத்தலாலேயே அது மாதம் எனப்படுகிறது. அவ்வகையில் மாதத்தின் தொடக்கம் என்பது ஓரைக்குள் கதிரவன் புகுங்காலமே யாகும். ஆதலின் கதிரவனை அடிப்படையாகக் கொண்டே மாதம் தொடங்குகிறது என்பது தெளியப்படும்.
மேற்கூறியாங்குச் சுறவம் (தை) முதல் நாளில் தொடங்கும் வடசெலவும், கடகம் (ஆடி) முதல்நாளில் தொடங்கும் தென் செலவும் எனும் இருவகைச் செலவும் கதிரவனை அடிப்படையாய்க் கொண்டனவேயாம்.ஆகவே, ஓர் ஆண்டின் தொடக்கமும் கதிரவன் இயக்கத்தின் அடிப்படையில் அமைதலே இயற்கை நெறியும் தமிழ்மரபுமாம், தமிழ்நாட்டு மக்கள் தாம் வாழும் தென்றிசையில் இருந்து வடசெலவு தொடங்கும் சுறவ(தை) முதல்நாளில் கதிரவனைப் போற்றியும் பொங்கலிட்டு மகிழ்ந்தும் புதுநாளாகக் கொண்டாடியும் வருவதால் அதுவே ஆண்டின் தொடக்கமாகவும் கொள்ளற்பாலது.
ஆனால், விக்கிரமாதித்தன் என்னும் வடபுல மன்னன் பெயரான் அமைந்த விக்கிரம சகம் என்னும் ஆண்டு முறையின்படி, மேழ(சித்திரை) மாத முதல்நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டு, இக்காலத்தில் அதுவே தமிழ்ப் புத்தாண்டு நாள் எனக் கொண்டாடப்படுகின்றது.
வேளாண்மைத் தொழிலுக்கான வாய்க்கால் வெட்டு, எருவடி முதலான வேலைகள் பெரும்பாலும் மேழ(சித்திரை) மாதத்தில் தொடங்கி நடைபெற்றுப் போரடி, வைக்கோற்போர் என பெரும்பாலும் மீனம்(பங்குனி) மாதத்தில் நிறைவடைதலின் , மேழம் முதல் மீனம் ஈறான பன்னிரு மாதக் காலப்பகுதி ஓராண்டாக மக்களிடையே வழக்கூன்றியிருக்கிறது, அது, கல்வியாண்டு, கணக்கியல் ஆண்டு என்பன போல் வேளாண்மை ஆண்டாம்.
ஆயினும் அதூவே எல்லா நிலைக்கும் ஏலாது.அன்றியும், அச் சகயாண்டு ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ ஈறான பெயர்களைக் கொண்ட அறுபதாண்டு வட்டமாகச் சுழன்று வருவதால், நெடுங்கால வரலாற்றுக்கும் அது பயன்படுமாறில்லை.மேலும் ‘பிரபவ’ முதலான அறுபது பெயர்களும் சமற்கிருதமே யன்றித் தமிழ்சொற்கள் அல்ல. ‘ஆண்டுப் பிறப்பு’ என்பதில் உள்ள பிறப்பை மகப்பேறெனத் தவறாகக் கொண்டு ‘அட்சய’ ஈறான அவ்வறுபதும் குழந்தைகள் என்றும், அவை பெண்கோலம் பூண்ட நாரதனும் அவன் பாட்டனான கண்ணனும் கூடியதனால் உடனேயும் தொடர்ந்தும் பிறந்தன என்றும் கூறும் தொன்ம(பாகவத)க் கதையும் மிகவும் இழிவானதாக இருக்கிறது.
ஆகவே தமிழ்ப்பேரறிஞர்கள் கடந்த எண்பத்தாறு ஆண்டுகட்கு முன்பு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தவத்திரு மறைமலையடிகளார் தலைமையில் கூடி நிறுவிய தொடராண்டான திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டாகக் கொள்ளத்தக்கது; இன்று தமிழுணர்வாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் ஆண்டான தொடராண்டின் தொடக்கம், இப்போது பெருவாரியாக வழங்கிவரும் கிரிகேரியன் ஆண்டுமானம் எனப்படும் ஆங்கில ஆண்டிற்கு முப்பத்தோராண்டு முற்பட்டது. அக் கிறித்துவ ஆண்டு கி.மு. –கி.பி. என வழங்கப்படுதல் போல் திருவள்ளுவர் ஆண்டும் திமு. –தி.பி. என வழங்கப்பெறும்.இவ்வாண்டு கி.பி.2022 ஆதலின் இதற்குச் சம்மான திருவள்ளுவராண்டு தி.பி.2053 ஆகும்.
ஆகவே, மேழ(சித்திரை) முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டதும் தமிழாண்டு என வழங்கப்பட்டு வருவதுமான சக ஆண்டுமானம் போலியானதும் பெரும் பயனற்றதும் தமிழுக்கு அயலானதும் ஆகும் என்பதும், தமிழாண்டெனக் கடைப்பிடிக்கத் தக்கது தொடாராண்டான திருவள்ளுவர் ஆண்டுமானமே என்பதும் இத் தமிழாண்டின் தொடக்கம் பொங்கல் திருநாளான சுறவ (தை) முதல் நாளே என்பதும் பிறவும் தெள்ளத் தெளிவாம்.
எண் தமிழ் மாதங்கள் சமற்கிருதம் திரிபு மாதங்கள்:
1. சுறவம் – புனர்தை – தை
2. கும்பம் – மகசி – மாசி
3. மீனம் – பல்குணா – பங்குனி
4. மேழம் – சைத்திரம் – சித்திரை
5. விடை – வைசாகி – வைகாசி
6. ஆடவை – மூலன் – ஆனி
7. கடகம் – உத்திராடம் – ஆடி
8. மடங்கல் – அவிட்டம் – ஆவணி
9. கன்னி – புரட்டாதி – புரட்டாசி
10. துலை – அகவதி – ஐப்பசி
11. நளி – கிருத்திகா – கார்த்திகை
12. சிலை – மிருகசீரச – மார்கழி
இந்த திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2055. ( 2024+31=2055)
தமிழுணர்வாளர்கள் 2055 ஆம் ஆண்டுப் புத்தாண்டை கொண்டாடிவருகிறார்கள்.