இலங்கை அதிபர் தேர்தல் – தமிழீழத் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

இலங்கையில் இவ்வாண்டு மத்தியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழீழத் தமிழ்மக்கள் நிலைப்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டுவருகின்றன.

தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது,
தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது,
தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பது

என்று மூன்று விதமான கருத்துகள் உள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் 31.12.2023 அன்று கோண்டாவிலில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், இதுகுறித்துப் பேசியதாவது….

தமிழ்த் தரப்பு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் பேசினாலும் எவரும் வெளிப்படையாகத் தமது வாக்குறுதிகளைத் தரப்போவதில்லை. தமிழர் தரப்புக்கு ஆதரவாகக் காட்டிச் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வெளிப்படையாகத் தராத எந்தவொரு உத்தரவாதமும் தேர்தலின் பின்னர் கண்டுகொள்ளப்படாது என்பதே கடந்த கால வரலாறு. சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவையே இறுதியில் வெல்ல வைக்க முடிந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

ஒப்பீட்டளவில் தமிழ்த் தரப்பின் முன்னால் உள்ள தெரிவு பொது வேட்பாளர்தான். இதில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் வெற்றிபெறப் போவதில்லை. ஆனால், தாம் விரும்பம் அரசியல் தீர்வை வெளிப்படையாக முன்வைத்துத் திரளான தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமது அபிலாசையை வெளிப்படுத்த முடியும். இது சமஸ்டியாகவும் இருக்கலாம் தனி நாடாகவும் இருக்கலாம். ஒருவகையில் இதனைத் தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பொது வாக்கெடுப்பாகக்கூடக் கருதலாம். ஆனால், இதன் வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வாக்குகளைக் திரட்டக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response