மின்னணு எந்திரம் மூலம் தேர்தல் நடத்த எதிர்ப்பு – விடுதலைச்சிறுத்தைகள் போராட்டம்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை – வெள்ளப் பாதிப்பைத் ‘தீவிர பேரிடராக’ அறிவிப்பதுடன் போதிய நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது,

இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

திசம்பர் 04 அன்று வீசிய ‘மிக்ஜாம்’ புயலால் – பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களும்; அதன் பின்னர் கடந்த திசம்பர் 16, 17 நாட்களில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரை மாநில அரசு மட்டுமே தன்னந்தனியாக எதிர்கொள்வது இயலாத ஒன்றாகும்.

எனவே, இதனைத் ‘தீவிர இயற்கைப் பேரிடராக’ (Natural Calamity of Severe Nature ) அறிவித்து, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் வாயிலாக முதலில் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், 19.12.2023 அன்று புது தில்லியில் இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

09.12.2023 அன்று தமிழ்நாட்டிலேயே முதல் கட்சியாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கியதோடு, 19.12.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கோரி அறிக்கை அளித்தோம்.

மேலும் 07.12.2023 மற்றும் 19.12.2023 ஆகிய நாட்களில் இரண்டுமுறை உள்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதங்கள் எழுதி அவற்றின் மூலமாகவும் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமரோ உள்துறை அமைச்சரோ நேரில் பார்வையிட வேண்டும் எனவும் கோரினோம்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததோடு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்த போதும் அதைப் பரிவோடு பிரதமர் கேட்டுக் கொண்டார் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட உதவித்தொகை அளிக்கவில்லை.

நிதி வழங்குவதற்கு மாறாக இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களும் பாஜகவினரும் நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசைக் குறை சொல்லியும், அவமதிக்கும் வகையில் பேசியும் அவதூறு செய்து வருகின்றனர். பேரிடர் நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவினரின் நோக்கமாகத் தெரிகிறது.

இந்திய ஒன்றிய அரசு வசூலிக்கும் வரி வருவாயில் மிக அதிகமான தொகையை வழங்கும் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு வரியாக செலுத்தும் தொகைக்கும் அதற்குக் கிடைக்கும் பங்கீட்டுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. எப்படி வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, அதுபோலவே பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்குவதிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ஆண்டொன்றுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகை வெறும் 900 கோடி மட்டுமே. ஆனால் பேரிடர் பாதிப்பு அதிகம் இல்லாத பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகமான தொகையை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது.

தீவிர இயற்கைப் பேரிடர் நேரிட்டாலும் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என்று மறுக்கும் ஒன்றிய அரசு, பாஜக ஆளும் குஜராத் முதலான மாநிலங்களுக்கு அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே நிதியை வாரி வழங்குகிறது. இப்படி ஓரவஞ்சனை செய்வது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலே தவிர வேறில்லை. இது இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேர் எதிரானதாகும்.

தீவிர பேரிடர் காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் இத்தகையப் போக்கைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிவாரணத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அடுத்து-

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வருகிறது. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
சுமார் 150 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் எம்.பி’க்கள் இல்லாமல், முறையான விவாதமும் நடத்தாமல் பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை ஃபாசிச பாஜக அரசு இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்றி இருக்கிறது.

அதில் ஒரு சட்டம், தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பானதாகும். தலைமைத் தேர்தல் ஆணையரை- இந்திய பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மாற்றும் விதமாக இந்திய பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் என்றும்; அந்தக் குழுவில் மூன்றில் இரண்டு பேர் கருத்து பெரும்பான்மையாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் ஒரு சட்டத்தை இப்போது ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் ஆளுங்கட்சி சார்பான ஒருவரே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இனி நியாயமான தேர்தல் இந்தியாவில் நடக்குமா என்ற ஐயம் எழும்பியிருக்கிறது.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் உள்ளிட்ட பல சட்ட வல்லுநர்கள், ’இந்தச் சட்டத்தின் காரணமாக இந்தியாவில் நியாயமாகத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை குலைந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது ஏற்கனவே மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். இப்போது தேர்தல் ஆணையமும் ஆளுங் கட்சிக்குச் சார்பாக மாற்றப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் 2024 பொதுத்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்து விட்டது.

எனவே 2024-பொதுத் தேர்தலை இப்போதுள்ள நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் நடத்தக்கூடாது. மாறாக, 100 சதவீத வாக்குப் பதிவு எந்திரங்களும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தோடு இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தாமளிக்கும் வாக்குக்கு ஒப்புகைச் சீட்டைப் பெற்று அதைச் சரி பார்த்து, வேறு ஒரு பெட்டியில் இட வேண்டும். தேர்தல் முடிவானது அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதன் அடிப்படையிலேயே அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட இவ்விரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி, இந்திய ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வரும் திசம்பர் 29 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் அனைத்துத் தரப்பு சனநாயகச் சக்திகளும் பங்கேற்று இந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response