ஒரேநாளில் 95 செமீ மழை இன்றும் தொடருகிறது – தலைமைச்செயலாளர் பேட்டி

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது…..

தென் மாவட்டங்களில் பரவலாகக் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒராண்டு சராசரி மழை அளவைவிடவும் மிக மிக அதிகம்.

மழையால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

நெல்லையைப் பொறுத்தவரை மழை நீர் சீக்கிரம் வடிந்துவிடும். ஆனால் தூத்துக்குடியில் மழை நீர் வடிய தாமதம் ஆகலாம்.

வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கோவை மாவட்டம் சூலார் விமானப்படை நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்களை இயக்கி உணவு, நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு வருகிறோம். வானிலை ஆய்வு மையம் மழை கணிப்புகள் அறிவிப்பின் படி மீட்பு நிவாரணப் பணிகள் செய்து வருகிறோம்.

மீட்புப்பணிகளுக்காக இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

தென் தமிழகத்தில் இன்றும் (டிசம்பர்- 18) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் – 18) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response