அண்மையில் அளித்த நேர்காணாலொன்றில் திமுக பாராளுமன்ற உறுப்பின் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருந்ததாவது….
கேள்வி;- நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும் ?
பதில்:- “மேதகு தேசிய தலைவர் பிரபாகரன்.”
கேள்வி:- அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்?
பதில்:- முள்ளிவாய்க்காலுக்கு மன்னிப்புக் கோருவேன்.
இவ்வாறு அவர் கூறியதற்காக பாஜகவினர் அவரைச் சாடிவருகிறார்கள்.
இதையொட்டி, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற
உண்மை நிலையை உணராத கிணற்றுத் தவளைகள்.
தமிழீழ மக்கள் தங்களது தேசியத் தலைவராக பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்கள் தங்களின் போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரிய தலைவராக அவரைக் கருதுகிறார்கள். இந்த உண்மையைத்தான் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கூறியிருக்கிறார்.
“அதுமட்டுமல்ல, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 50,000த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு பிரபாகரன் அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன்” என அவர் கூறியதற்காகவும் கிணற்றுத் தவளைகளாக இருக்கக் கூடியவர்கள் அவருக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிலிருந்து சிங்கள இராணுவமும், கடலிலிருந்து இந்திய கடற்படையும் இணைந்து நடத்திய கொடுமையான குண்டுவீச்சின் விளைவாகத்தான் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டனர். அதற்காக மனசாட்சி உள்ளவர்கள் மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டார்கள். மனசாட்சியின் உறுத்தல் இல்லாதவர்கள்தான் தமிழச்சி தங்கபாண்டியனை சாடுகிறார்கள்.
இத்தகையவர்களை உண்மையான தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.