இராஜஸ்தான் தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவற்றில் இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இராஜஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் அதிக அளவில் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் மாநிலத்தில் தேர்தல் தேதியை மாற்றிமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்களும் பிரதிநிதித்துவங்களும் வந்தன.

அன்றைய தினம் தேர்தல் நடைபெற்றால் அது பெரிய அளவில் மக்கள் வாக்குப்பதிவில் பங்கேற்பதைப் பாதிக்கும், பாதுகாப்புச் சிக்கல்களும் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரதிநிதித்துவம் மற்றும் காரணிகளைக் கருத்தில் கொண்டு இராஜஸ்தான் தேர்தல் தேதியை நவம்பர் 23 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முன்னதாக, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா சட்டப்பேரவை பதவிக் காலம் வரும் 2024 ஜனவரியில் வெவ்வேறு தேதிகளிலும், மிசோரம் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் டிசம்பர் 17 ஆம் தேதியும் முடிவடைகிறது. அதனால், அக்டோபர் 9 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மிசோரம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, தெலங்கானாவில் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

5 மாநிலங்களில் மொத்தம் 679 தொகுதிகள் உள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.

Leave a Response