குறுவை இழப்பீடு வெறும் கண்துடைப்பு – பெ.மணியரசன் சாடல்

தமிழ்நாடு அரசின் குறுவை இழப்பீடு அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும் ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 05.10.2023 அன்று அறிவித்த குறுவைச் சாகுபடி இழப்பீட்டுத் தொகையும், பாதிக்கப்பட்ட நிலப்பரப்பும் உழவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உண்டாக்கியுள்ளன. காவிரி நீரின்றி, பயிர் பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு ரூபாய் 13,500 இழப்பீடு என்று கூறியுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு உழவர்களுக்குக் கிடைப்பது ரூபாய் 5,463.00 ஆகும்!

காப்பீட்டுத் தொகை உழவர்கள் கட்டும்போது, ஒரு ஏக்கர் சாகுபடிச் செலவு – ரூ. 35,000 என வரையறை செய்து, அதற்குரிய காப்பீட்டுத் தொகை வசூலிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு ஏக்கர் சாகுபடிச் செலவை வெறும் 5,463 ரூபாயாக முடிவு செய்திருப்பது பெரும் பாதகமாக இருக்கிறது. உழவர்களைப் பற்றிய அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு நெல் சாகுபடி பாதிப்புக்கு வழங்கினார்கள். அதுவும் போதாத தொகை தான். ஆனால், இப்போது 1 ஏக்கருக்கு 5,463 ரூபாய் இழப்பீடு என்பது வெறும் கண்துடைப்பு வேலையாக இருக்கிறது.

அடுத்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்புப் பரப்பு வெறும் 40 ஆயிரம் ஏக்கர் என்பது பெரும் உண்மை மறைப்பாகும். தமிழ்நாடு அரசு குறுவைப் பயிர் பாதிப்பை முடிவு செய்ய என்ன அடிப்படைக் காரணிகளை முன்வைத்து முடிவு செய்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்திய அரசு பாதிக்கப்பட்ட சாகுபடி வயல்களைத் தனித்தனியே பார்க்காமல் ஓர் ஒன்றியத்தில் சில ஊர்களைப் பார்த்து விட்டு, அந்த ஒன்றியம் முழுவதும் பாதிக்கப்படாத பகுதி என்று அறிவிக்கும் நடைமுறை வைத்துள்ளது. குறைந்தது ஒரு கிராமத்தைக் கூட அடிப்படை அலகாக வைக்காமல், ஏராளமான கிராமங்களைக் கொண்ட ஓர் ஒன்றியத்தை அடிப்படை அலகாக வைத்து, பாதிப்பு இல்லை என்று அறிவிப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அரசு! அதே “பாரத” மாடலைத் தான், “திராவிட மாடல்” அரசும் அடிப்படை அலகாக வைத்து, மூன்று இலட்சம் ஏக்கர் அளவு பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் வெறும் 40 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிப்பு என்று முடிவு செய்ததா என்பதையும் தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும்.

உண்மையில், உழவுத் தொழிலைத் தவிர வேறு தொழில் அறியாத உழவர்களுக்கு – மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் மக்களுக்கு உதவிட, ஒவ்வொரு வயலின் தனிப்பாதிப்பையும் கணக்கெடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்கினால்தான் அது மக்கள் நல அரசாக இருக்க முடியும்.

குறுவை சாகுபடிக்குக் காப்பீட்டுத் திட்டடம் இந்திய அரசும் அறிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசும் தரவில்லை.

கர்நாடகத்தில், தமிழ்நாட்டுத் தண்ணீரை சட்டவிரோதமாகத் தேக்கி வைத்துக் கொண்டு, சாகுபடி செய்கிறார்கள். ஆனால், கர்நாடக அரசு கர்நாடகத்தில் இந்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பணம் பெற்று, கூடுதலாக உழவர்களுக்கு சாகுபடி இழப்பீடு வழங்க முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசும் இந்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி பெற்று, உழவர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஞாயமான – உண்மையான காரணிகளை (அளவு கோல்களை) முன்வைத்து, போர்க்கால அவசரத்துடன் டெல்டா மாவட்டங்களில் புதிதாகக் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள் அனைவருக்கும் முழு அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

அடுத்து, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர முடியாத நிலையில், தமிழ்நாடு அரசு இருப்பது பெருந்துயரம்! இப்போது, சம்பா – தாளடி சாகுபடி செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை உழவர்களுக்கு வெளிப்படையாகத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்!

ஒருவேளை, தமிழ்நாடு அரசு தன்னால் காவிரி நீர் பெற முடியாது என்று கருதினால், சம்பா – தாளடிக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் கிடைப்பதையாவது உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response