தில்லி பயணம் தோல்வி – எடப்பாடி அணிக்குள் மோதல்

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.இருவரும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் யார் பெரியவர்? என்ற மோதல் இருந்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, பாஜகவுடன் சேர்ந்ததால்தான் அதிமுகவுக்குத் தோல்வி ஏற்பட்டுள்ளது. எங்களால் அவர்களுக்குத்தான் பலன். எங்களுக்கு இழப்புதான் என்றார். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் இரு அணியினரும் தனித்துப் போட்டியிட்டனர். அதில் பல இடங்களில் இரு அணியினருமே வைப்புத்தொகையை இழந்தனர்.

இதனால் இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது.

இதற்காக அண்ணாமலையுடன் மோதலில் ஈடுபட்டிருந்த எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா பேசினார்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், வெளிநாட்டில் முதலீடுகள் பற்றிய விபரங்கள் எங்களிடம் உள்ளன. இதனால் நாங்கள் நினைத்தால் நீங்கள் உட்பட பல முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்ய முடியும் என்று மிரட்டும் தொனியில் பேசி கூட்டணியை இறுதி செய்து எடப்பாடியை அனுப்பி விட்டார்.

இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியிலும் வர முடியவில்லை. கூட்டணியாகவும் செல்ல முடியாமல் அவர் தவித்து வந்தார். இந்தநிலையில்தான் பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை கற்பனையாகப் பேசினார்.

இதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். ஆனால் இரண்டே நாட்களில் அதிமுக தலைவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூவை விட்டு சமாதானக் கொடியைப் பறக்க விட்டதோடு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை பாஜக ஏற்க வேண்டும் என்றார். ஆனால் இதற்கு அண்ணாமலை மறுத்து விட்டார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

இதனால், அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி தொடரும் என்று தெரிவிப்பதற்காக இரகசியமாக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றனர். அங்கு அமித்ஷாவை சந்தித்து புகார் செய்வது திட்டம்.

இதனால் கொச்சி மற்றும் பெங்களூரில் இருந்து இரு அணியினராகப் பிரிந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் டெல்லி சென்றனர்.

டெல்லியில் பியூஷ்கோயலை சந்தித்து, அமித்ஷாவுடன் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார். அவர் தொடர்பு கொண்டபோது, அமித்ஷா அதிமுக தலைவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார். நட்டாவை சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார். இதனால் நட்டாவை சந்தித்து புகார் தெரிவித்தனர். அண்ணாமலை தலைவர் பதவியில் நீடித்தால், கூட்டணி தோல்வியைச் சந்திக்கும் என்று கூறினர். ஆனால் நட்டாவோ, அண்ணாமலையை மாற்ற முடியாது. அவர் மாநிலத்தலைவராக நீடிப்பார். போய் தேர்தல் வேலையை கவனிக்கும்படி அமித்ஷா கூறிவிட்டார். இதனால் உடனடியாக தமிழ்நாடு திரும்பி வேலையைக் கவனியுங்கள் என்று பாஜக உறுப்பினர்களுக்கு உத்தரவு போடுவதுபோல முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனால் நேற்று காலை வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோவை திரும்பினர். அதேநேரத்தில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை விமானநிலையத்துக்கு நேற்று பிற்பகலில் திரும்பினர்.

கோவை மற்றும் சென்னை வந்த முன்னாள் அமைச்சர்கள் யாரும், எடப்பாடியை காலையில் சந்திக்கவில்லை. தோல்வி விவகாரம் வெளியில் தெரிந்தால் கெட்ட பெயர்.இதனால் கடந்த 2 நாட்களாக மூத்த நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.

அதேநேரத்தில் டெல்லி சென்ற தலைவர்களுக்குள் கருத்து மோதல் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சி.வி.சண்முகத்திற்கு அதிமுக தலைவர்கள் பாஜக தலைவர்களின் காலில் விழுந்து கிடப்பது பிடிக்கவில்லை. எதற்காக அவர்களைத் தொங்கிக் கொண்டு, அண்ணாமலையை மாற்றக் கூற வேண்டும். நாம்தான் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என்று கூறியுள்ளோம். கூட்டணி தேவை என்றால் அவர்கள்தானே வரவேண்டும். நாம் ஏன் சென்று புகார் செய்ய வேண்டும். அதனால்தான் அவர்கள் மதிக்கவில்லை என்று கோபத்தில் கூறியுள்ளாராம்.

அண்ணாமலையை மாற்ற முடியாது என்று அமித்ஷா கூறிவிட்டதால், கூட்டணியில் இருந்து வெளியிலும் வர முடியாமலும், அண்ணாமலையுடன் சேர்ந்து அவர் அசிங்கப்படுத்துவதை தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க முடியாமலும் என்ன செய்வது? என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி விழி பிதுங்கி வருவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிக்கலில் அடுத்தடுத்து பல அதிரடி நிகழ்வுகள் இருக்கும் என்கிறார்கள்.

Leave a Response