அமலாக்கத்துறை பிடியில் நடிகை நுஸ்ரத் – மேற்குவங்க பரபரப்பு

ஒன்றியத்தை ஆளும் பாசக அரசு, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்கள் மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கிறது.

இதற்கு தமிழ்நாட்டில் நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.அண்மையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைகளைச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி மேற்குவங்கத்திலும் அமலாக்கத்துறை நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

மேற்கு வங்கத்தின் பஷிரத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த நடிகை நுஸ்ரத் ஜகான்(33).

இவர், கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் பகுதியில், மூத்த குடிமக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார்.

விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர், அந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து 2017 ஆம் ஆண்டே விலகி விட்டதாகத் தெரிவித்தார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடந்தது.

மம்தாபானர்ஜியை பலவீனப்படுத்துவதற்காக இதுபோன்ற விசாரணையை அமலாக்கத்துறையை வைத்து நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்ட்ப்படுகிறது. இந்நிகழ்வு மேற்குவங்கத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Response