சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் பிணை கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அச்சமயம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 11 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிணை கோரி 3 ஆவது முறையாகத் தாக்கல் செய்த மனு வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
அந்த மனுவில், நான் ஒரு அப்பாவி. சட்டத்தை மதித்து நடப்பவன்.பிணை வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளைக் கலைக்க மாட்டேன். எனவே பிணை வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார். இந்த மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் 14 ஆவது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு சட்டப்படி நடந்தால் இப்படி நிகழாது இது முழுக்க முழுக்க அரசியலாக இருக்கிறது என்று சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்க்கின்றனர்.