சந்திரபாபு நாயுடு கைதுக்குப் பிறகான நிகழ்வுகள் – ஆந்திர பரபரப்பு

ஆந்திராவில் 2018 ஆம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் அருகே உள்ள நந்தியாலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆளும் கட்சியினரின், மக்களுக்கு எதிரான ஆட்சி குறித்து அவர் பல மாவட்டங்களில் பேருந்துயாத்திரை மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நந்தியாலம் ஆர்.கே திருமண மண்டபம் அருகே அவர் நேற்று முன் தினம் இரவு பேருந்திலேயே உறங்கச் சென்றார்.அவருடன் வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அந்தத் திருமண மண்டபத்தின் அருகே இரவு முழுவதும் இருந்தனர். அப்போது டிஐஜி ரகுராம ரெட்டி மற்றும் நந்தியாலா எஸ்பி. ரகுவீரா ரெட்டி தலைமையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 6 பேருந்துகளில் திடீரென அப்பகுதிக்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனால், கட்சி நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பலரை காவல்துறையினர் இரவோடு இரவாக கைது செய்தனர். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு இருந்த பேருந்தின் கதவை திறக்கும்படி தட்டினர். ஆனால், சந்திரபாபு நாயுடு திறக்கவில்லை. அதன் பிறகு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சந்திரபாபு நாயுடு பேருந்தின் கதவை திறந்து விசாரித்தார். அவருடன் காவல்துறையினர் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘‘தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், மாநிலம் முழுவதும் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்கள் மூலம் சீர்மிகு மையங்கள் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ. 371 கோடி கைமாறியதில் ரூ.118 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீங்கள் முதலாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளீர்கள். ஆதலால், உங்களைக் கைது செய்கிறோம்’’ என சிஐடி காவல்துறையினர் கூறினர்.

இதற்கு எஃப் ஐ ஆர் உள்ளதா ?ஆதாரங்கள் உள்ளதா ? என சந்திரபாபு நாயுடு கேட்டார். அவற்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறோம் என காவல்துறையினர் பதிலளித்து, சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை அவரது மகிழுந்து மூலமாகவே நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

சந்திரபாபு நாயுடுவை நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதி வரை தொடர்ந்து 8 மணி நேரம் காவல்துறையினர் மகிழுந்தில் அழைத்துச் சென்றனர். வழி நெடுகிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை முதலே ஆந்திராவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் அவரவர் வீடுகளிலேயே காவலில் வைத்தனர். ஆயினும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் ஆந்திராவில் நேற்று அதிகாலை முதலே பேருந்து பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டன. தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநில எல்லைகளிலேயே ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.திருப்பதி-திருமலை இடையே மட்டும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட வில்லை. தெலங்கானாவில் ஜெகன் மோகனை கண்டித்து அவரது உருவ பொம்மையை தெலுங்கு தேசம் கட்சியினர் எரித்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். இதனால் ஆந்திராவில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

2018 சட்டத் திருத்தத்தின் படி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்ய வேண்டுமெனில், முன் கூட்டியே ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை ஆளுநரிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை.

ஆனால், ஆளுநர் அனுமதி தேவையில்லை என முடிவு செய்து ஜெகன்மோகன் அரசு சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்துள்ளது.

Leave a Response