118 கோடி ஊழல் வழக்கு – சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர்.

நந்தியால் பகுதி காவல்துறை டிஐஜி தலைமையில் அதிக அளவிலான காவல்துறையினர் இன்று அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபுவை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதேபோல், சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காத்திருந்த காவல்துறையினர், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்குக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது கட்சித் தொண்டர்கள் மாநிலம் முழுதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response