எடப்பாடி பழனிச்சாமியைக் காட்டிக் கொடுக்காதே என மிரட்டல் – தனபால் புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் மகிழுந்து ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலை காவல்துறையினர் கைது செய்தனர். பிணையில் வெளியே வந்துள்ள அவர், தற்போது அவ்வழக்கு பற்றி பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருகிறார். இதனால், தனபாலிடம் வரும் 14 ஆம் தேதி விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்து அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம், தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி, சேலம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தனபால் மீது தன்னை தாக்கியதோடு கொல்ல முயற்சித்து வருவதாக புகார் கொடுத்தார்.

இந்த புகார் கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் சேலத்தில் தனபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி 2017 இல் இருந்தே நான், எனக்குத் தெரிந்தவற்றைக் கூறிக்கொண்டுதான் இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. தற்போது என்னிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி கூடுதல் எஸ்பி, சம்மன் கொடுத்து அழைத்துள்ளார்.

அந்த விசாரணையின் போது என்னிடம் தம்பி கனகராஜ் கூறிய அனைத்து உண்மைகளையும் தெரிவிப்பேன். மாஜி முதல்வர் பற்றி நான் எதுவும் கூறக்கூடாது என என்னிடம் பேரம் பேசுகிறார்கள். கொங்கணாபுரத்தில் உள்ள எனது வீட்டிற்கு மகுடஞ்சாவடி மெயின்ரோட்டில் வசித்து வரும் ஒரு முக்கியபுள்ளி, நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்தார். அவர், கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வரைக் காட்டிக்கொடுக்காதே. அதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். என்னிடம் பேரம் பேச வேண்டாம் எனக்கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டேன்.

எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும், என் பிள்ளைகளுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது சிலரின் தூண்டுதல்பேரில், கோணகாப்பாடியை சேர்ந்த அதிமுக நிர்வாகி என் மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து, என்னை கோவையில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்படியே சென்றால் என்னை கொன்றுவிடுவார்கள். அதனால் சிபிசிஐடி அலுவலகத்தில் நாளைய தினமே (இன்று) ஆஜராகி தகவல்களை தெரிவிக்க சம்மனை மாற்றிக் கொடுக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இவ்வாறு தனபால் கூறினார்.

Leave a Response