கீழடி ஆய்வறிக்கையை மூடிமறைக்கும் இந்திய அரசு – பழ.நெடுமாறன் அதிர்ச்சித் தகவல்

கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு இந்திய அரசை வற்புறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

உலகளவில் தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை உலகறியக் கொண்டு செல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா வாழ் தமிழர்களின் மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

மேலும், கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகமும் நிலவியது என்பதையும், எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு மேம்பட்ட சமுதாயமாகத் தமிழர்கள் விளங்கினார்கள் என்பதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியிருப்பதை தனது செய்தியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வேளையில் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கீழடி ஆய்வு பற்றிய ஒரு முக்கியமான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

2013-2014 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசின் தொல்லாய்வுத் துறையின் அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா அவர்கள் தலைமையில் வைகை ஆற்றின் இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லாய்வுச் சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை மாநகருக்கு மிக அருகில் உள்ள கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லாய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் நகர்ப்புற நாகரிகம் ஒன்று புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ், பிராமி எழுத்துப் பொறிப்புகளும் கண்டறியப்பட்டன. இதன்மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பதும், இதன் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்பதும் கரிம ஆய்வுமூலம் நிலைநாட்டப்பட்டது.

இந்த அரிய கண்டுபிடிப்பிற்காக அமர்நாத் இராமகிருட்டிணா அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்குப் பதில் அவர் உடனடியாக தொலைதூர அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். பிறகு பல்வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். ஆனாலும் தனது தொல்லாய்வில் கண்டறிந்த வரலாற்று உண்மைகளை அறிக்கையாக அளிக்கும் கடமையிலிருந்து அவர் தவறவில்லை. பெரும்பாடுபட்டுத் தனது விரிவான அறிக்கையினை இந்திய அரசின் தொல்லாய்வுத்துறைக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அளித்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அந்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

“2004-2005ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 160க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்றும் வேறு ஏராளமான பொருட்களும் கண்டறியப்பட்டன. முழு மனித எலும்புக் கூடு உட்பட அத்தனையும் மைசூரில் உள்ள இந்திய அரசின் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றை ஆராய்ந்த முடிவுகள் 19 ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னமும் வெளியிடப்படவில்லை” என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அதே கதி கீழடி ஆய்வறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. கீழடி ஆய்வு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு இந்திய அரசை வற்புறுத்த வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response