உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் திருத்தங்கள் – கி.வெங்கட்ராமன் கோரிக்கை

தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் வலுவான செயல் திட்டங்கள் இல்லை என்று தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளீயிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்நாடு அரசு, “அங்கக வேளாண்மைக் கொள்கை” என்ற வடமொழிச் சொல்லாடல்களில், முதல் முறையாக உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவித்திருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஆரிய பராசர முனிவர் உயிர்ம வேளாண்மைக்கு முன்னோடி என்பதுபோல் சித்தரித்திருப்பது தவறானது. கீழடியும், அதற்கு முந்தைய சிந்துவெளியும் தமிழர்கள் தான் முன்னோடியான வேளாண்மைச் சமூகம் என்பதற்கு சான்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, தி.மு.க. அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கை இவ்வாறு தவறான வரலாற்றைச் சொல்வது வருத்தமளிக்கிறது.

இந்த வேளாண்மைக் கொள்கை உழவர்களை உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுமாறு விழிப்புணர்வூட்ட பரப்புரை ஆவணமாக இருக்கிறதே அன்றி, அரசுப் பொறுப்பெடுத்துக் கொண்டு உயிர்ம வேளாண்மையை வளர்ப்பதற்கான எந்தவகை உறுதியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை!

“பசுமைப் புரட்சி” என்ற பெயரால் திணிக்கப்பட்ட இரசாயன வேளாண்மையின் தீமைகளை எடுத்துக்காட்டியுள்ள இந்தக் கொள்கை அறிக்கை, இரசாயன வேளாண்மை உழவர்கள் உயிர்ம வேளாண்மைக்கு மாறுவதற்கான எந்தவகை ஊக்குவிப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் உழவர்களின் சராசரி நிலவுடைமை 1 எக்டேர். அதாவது, இரண்டரை ஏக்கர் ஆகும். மிகப் பெரும்பாலான உழவர்கள் 5 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ளவர்கள்தான். மீண்டும் மீண்டும் இரசாயன வேளாண்மையில் ஈடுபட்டு ஈடுபட்டு கடனாளியாகிக் கொண்டிருக்கும் இவர்கள், உயிர்ம வேளாண்மைக்கு மாறுவதன் தேவையை உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆயினும், இராசயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாற விரும்பும் உழவர்கள் மண்ணின் நுண்ணுயிரிகளை மீட்டு, மண்ணின் உயிர்ப்புத் தன்மையை மீட்பதற்குக் குறைந்தது மூன்றாண்டுகள் தேவைப்படுகின்றன. இரசாயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாறும் இந்த மூன்றாண்டு காலத்தில், எந்தவகை இலாபத்தையும் இவ்வுழவர்கள் பெற முடியாது.

அதனால்தான், தொழில் வழியாகவோ வேலை வாய்ப்பின் வழியிலோ வேறு வருமானம் இல்லாத உழவர்கள் உயிர்ம வேளாண்மைக்கு மாறத் தயங்குகிறார்கள். இந்த சிறு நடுத்தர உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடுசெய்யக் கூடிய வகையில், சிறப்புப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தையோ நேரடி நிவாரணத் திட்டத்தையோ அரசு செயல்படுத்தாமல் பெரும்பாலான உழவர்களை உயிர்ம வேளாண்மைக்கு மாற்ற முடியாது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் ஒரு செய்தியும் இல்லை.

தமிழ்நாட்டின் ரேசன் கடைகளிலும், மருத்துவமனைகளிலும், அரசு விடுதிகளிலும் குறிப்பிட்ட விழுக்காடாவது உயிர்ம வேளாண்மை விளைபொருள்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்குத் தகுந்தாற் போல உயிர்ம வேளாண்மை விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். உறுதியான சந்தை வாய்ப்பை அதுதான் ஏற்படுத்தும்.

தெலுங்கானா மாநில அரசு, திருப்பதி லட்டு விற்பனை உள்ளிட்ட ஆலய உணவு வழங்கல்களில் உயிர்ம வேளாண்மை விளைபொருட்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. ஒரிசா, சார்க்கண்ட் அரசுகள் இரசாயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு நேரடி ஊக்குவிப்புத் தொகை வழங்குகின்றன. இவற்றையெல்லாம் தமிழ்நாடு அரசு, முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு கொள்கையில் சேர்க்க வேண்டும்.

நகர்ப்புற மகளிர் குழுக்களையும், உயிர்ம வேளாண்மை உழவர் குழுக்களையும் ஒருங்கிணைத்து, அதற்குரிய செயலிகளின் வழியாக சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தித் தர வேண்டும்.

நாட்டின ஆடு – மாடு வளர்ப்பையும், கோழி – தேனீ வளர்ப்பையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும், அதற்கான உறுதியான செயல்திட்டங்கள் அறிவிப்பில் இல்லை.

ஆடு – மாடு மேய்க்கும் கிடைக்காரர்கள் அவற்றில் கிடைக்கும் சாண எருவை நம்பியே வாழுகிறார்கள். சாண எரு தான் உயிர்ம வேளாண்மைக்கு முதன்மையான இடுபொருள். கிடைக்காரர்களையும், உயிர்ம வேளாண்மை உழவர்களையும் ஒருங்கிணைக்க நிறுவன வழிப்பட்ட திட்டங்களுக்கான எந்த அறிவிப்பும் இக்கொள்கை அறிக்கையில் இல்லை.

தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நிறுவப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. மாறாக, தற்சார்பான உயிர்ம வேளாண்மை வாரியம் அமைப்பது தான், உயிர்ம வேளாண்மையை நிலைத்த வழியில் கொண்டு செல்ல உதவி செய்யும்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உயிர்ம வேளாண்மை (அங்கக விவசாயம்) கொள்கை அறிக்கையில், மேற்சொன்ன திருத்தங்களையும் மேற்கொண்டு, ஒருங்கிணைந்த வகையில் உயிர்ம வேளாண்மையை முன்னெடுத்துச் செல்ல உறுதியாகச் செயல்பட வேண்டுமென தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response