
14.. 03. 23 அன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழில் இடம் பெற்றுள்ள இரண்டு கேள்வி பதில்கள் இவை –
1. மதம் மாற உரிமை உண்டு. ஆனால் ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு? இதற்கான ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில் – “மனம் சம்பந்தப்பட்ட மதம் மாறலாம். ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி மாறாது.”
இன்னொரு கேள்வி பதில் –
அண்ணா பல்கலைக்கழகத்தில் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து….
இதற்கான விடை இப்படித் தொடங்குகிறது – “மனித உரிமை என்றாலே மோசடிதான்”.
ஜாதி இரத்தத்தோடு தொடர்புடையதாம். மனித உரிமை மோசடியோடு தொடர்புடையதாம்.
அறிவியலில், இரத்தம் என்பது ஏ குரூப் பி குரூப் முதலான வகையைச் சேர்ந்தவை என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் துக்ளக் பார்வையில், இரத்தம் என்பது முதலியார் கு௹ப், பார்ப்பனர் குரூப், பட்டியல் இன மக்கள் குரூப் என்று வேறு வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கும் போல இருக்கிறது. இனிமேல் யாருக்காவது மருத்துவமனையில் இரத்தம் தேவைப்பட்டால், அவர் என்ன ஜாதி என்று பார்த்து, அந்த ஜாதிக்காரரின் இரத்தத்தை ஏற்றி விடலாம். யாரேனும் சிலர் அதனால் இறந்து போனால், துக்ளக் குருமூர்த்தி பொறுப்பேற்றுக் கொள்வார்.
நாம் அறிவோம், ஜாதி இரத்தத்தில் இல்லை. இவர்களின் ஜாதிக் கொழுப்புதான் இரத்தத்தில் இருக்கிறது!
அதேபோல மனித உரிமை என்றாலே அது மோசடிதான் என்று சொல்வது, சட்டத்திற்கும் சமூகத்திற்கும் எதிரானது. இப்படிச் சொல்வது மனித உரிமைகளை மதிக்காத, மனித நேயமே இல்லாத, பார்ப்பனிய ஆதிக்கத்தின் குரலாகத்தானே இருக்க முடியும்!
ஆனாலும் இன்னொரு கேள்விக்கு, ஒரு நல்ல விடையைச் சொல்லி இருப்பதற்காகக் குருமூர்த்தியைப் பாராட்டத்தான் வேண்டும்!
உலகில் 100% ஊழலற்ற நாடு ஏதாவது உள்ளதா என்னும் கேள்விக்கு, “இராமர் காலத்துக்கு முன், கிருத யுகத்தில், ஊழல், திருட்டு, பொய், பித்தலாட்டம், பெண் பாவம் போன்ற குற்றங்கள் இல்லாத நாடாக பாரதவர்ஷம் என்ற நாடு இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன என்கிறார்.
அப்படியானால், இராம இராஜ்ஜியம் வந்த பிறகுதான் ஊழல், திருட்டு, பொய், பித்தலாட்டம், பெண் பாவம் எல்லாம் வந்து சேர்ந்தன போலிருக்கிறது!
இந்த உண்மையை இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லி உள்ளமைக்காக, நாம் நன்றி சொல்ல வேண்டாமா? நன்றி குருமூர்த்தி அவர்களே! இராம இராஜ்ஜியம் இனி எப்போதும் வந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்!!
– சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
