ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று
காவல்துறை தலைமை இயக்குநர் – முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (09.03.2023) மாலை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது……

தமிழ்நாட்டில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கட்டாயக் கடமை. அத்துடன் அது ஒரு மனித நேயக் கடமையும் ஆகும்.

வடநாட்டு ஊடகங்களும், இந்திக்காரர்களும் தமிழ்நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் இந்திக்காரர்களை படுகொலைகள் செய்வதாகவும், தாக்கி அடித்து இரத்தக் காயங்கள் உண்டாக்குவதாகவும் வதந்தி பரப்பிய போது தாங்கள் கள ஆய்வுகள் செய்து அவ்வாறு தாக்குதல் எதுவும் இந்திக்காரர்கள் மீது நடக்கவில்லை என்று உறுதியாக அறிவித்தீர்கள். ஆனால் அதன் பிறகும் பீகார் சட்டப்பேரவையில் பா.ச.க.வினர் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் தாக்கப்படுவதைப் போல் கூச்சலிட்டு களேபரம் நடத்தினார்கள்.

பீகார் அரசால் அனுப்பப்பட்ட உயரதிகாரிகள் குழுவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழும் இந்திக்காரர்களைப் பார்த்துப் பேசி விசாரணைகள் நடத்திய பின், தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைத் தமிழர்கள் தாக்கும் நிகழ்வுகள் நடைபெறவில்லை. இந்தி பேசும் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்று அறிக்கைகளும், செய்தியாளர்களுக்குச் செவ்வியும் கொடுத்தார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாக வடநாட்டுத் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை எடுத்து வரும் மிகை நடவடிக்கைகள் இந்திக்காரர்களும், தமிழர்களும் சம உரிமையுள்ள மனிதர்கள் என்பதற்கு அப்பால், இந்திக்காரர்கள் தமிழ்நாட்டின் தலைமைக் குடிமக்கள், தமிழர்கள் அவர்களுக்கு அடுத்த நிலையில் சந்தேகப் பட்டியலில் உள்ளவர்கள் என்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் இந்திக்காரர்களுக்கு மிகமிக உயர்ந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. காவல்துறை அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றனர். ஆனால், தாங்கள் 8.3.2023 அன்று காவல்துறை உயர்நிலை அதிகாரிகளுடன் நடத்திய காணொலிக் கலந்துரையாடல் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு அச்சம்தரும் நிலையில் உள்ளது.

1.தமிழ்நாடெங்கும் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுடன் அந்தந்தப் பகுதி காவல் ஆய்வாளர்கள் வாட்ஸ் அப் தொடர்பும், கைபேசித் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பிற மொழித் தொழிலாளிகள் வசிக்கும் இடங்களில் காவல்துறையினர் இரவு பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும்.

3.சிறிய குழுக்களாக அல்லது குடும்பமாக வசிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை, தொடர்புடைய பகுதிக் காவல் ஆய்வாளர் சந்தித்து, உதவி தேவைப்பட்டால் அழைத்திட அவர்களுக்குத் தனது தொலைபேசி எண்ணைத் தர வேண்டும். பிறமாநிலத் தொழிலாளரிடமிருந்து ஏதேனும் புகார் மனு காவல் நிலையத்திற்கு வந்தால் அதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்

4.பிற மாநிலத் தொழிலாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால், காவல் ஆய்வாளர் அது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.உள்ளூர் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து ஏதேனும் செய்தி வெளியிடுவதாக இருந்தால், அதற்கு முன் (தங்களிடம்) உண்மையை உறுதி செய்து கொண்டு செய்தி வெளியிடும்படி அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூற வேண்டும்.

6.சமூக ஊடகங்களில் இந்தியில் பரப்பப்படும் போலிக் காணொலிகள் மற்றும் தகவல்களைக் கண்காணித்து, தொடர்புடைய காவல் அதிகாரிகள் அவைபற்றி தெளிவுபடுத்தி செய்தி வெளியிட வேண்டும்.

இச் செய்திகள் இன்று (9.3.2023) தினத்தந்தி, தினகரன், உள்ளிட்ட நாளேடுகளில் வந்துள்ளன.

தாங்கள் அறிவித்துள்ள மேற்கண்ட முடிவுகளால் புதிதாக சில பாதகங்கள் உருவாகலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

பாதகங்கள்:

1.தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்களும் பிறமாநிலத் தொழிலாளிகளும் சமமானவர்கள் அல்லர். மண்ணின் மக்களை விட பிற மாநில மக்கள் அரசின் – காவல்துறையின் கவனிப்பிற்கு முன்னுரிமை பெற்ற மேலானவர்கள்.

2.தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்கள், குறிப்பாக தமிழர்கள், சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட வேண்டியவர்கள். இத்தமிழர்களால் எந்நேரமும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு ஆபத்து வரலாம். அதனால் காவல் துறையினர் தமிழர்களைத் தங்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். ஆங்கிலேயர் ஆட்சியில் சில தமிழ்க் குடிகளை கண்காணிப்பில் வைத்தார்கள். இப்போது அது வேறு வடிவில் அனைத்துத் தமிழ்க் குடிகளுக்கும் எதிராக வரக்கூடாதல்லவா?

3.ஊடகம் மற்றும் செய்தித்தாள் செய்தியாளர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைக் காவல் துறையினரின் முன்அனுமதி பெற்று வெளியிட வேண்டும் என்பது முன்தணிக்கை முறை!

4.இவ்வாறு சம உரிமைக்கு அப்பால் சிறப்பு உரிமை கொண்ட பிரிவினராக (Privileged class) தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் – காவல்துறையினரால் நடத்தப்படும் பிற மாநிலத்தவர், சராசரித் தொழிலாளி போல் இனி உழைக்காத நிலை வரும். தொழில் உரிமையாளர்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளாத நிலை வரலாம். அயல் மாநிலத்தவர்தாம் தமிழ்நாட்டின் ஆதிக்கப்பிரிவினர் என்ற புதிய நிலை உருவாகும். தமிழர்களைக் கீழ்நிலையில் வைத்து அவர்கள் பார்க்கும் அவலநிலை ஏற்படும்.

5.திருப்பூர், சூலூர், சூளகிரி போன்ற இடங்களில் இந்திக்காரர்களால் தமிழர்கள் தாக்கப் பட்டார்கள். அந்நிலை மீண்டும் உருவானால், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கக் கூட தமிழர்கள் அச்சப்படும் நிலை ஏற்படும்.

அருள் கூர்ந்து தாங்கள் இதைப் பரிசீலியுங்கள்; மறு ஆய்வு செய்து தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு பாதகங்கள் வராத நடவடிக்கைகளை எடுக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பெ.மணியரசன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Response