தினசரி மரணச்செய்தி ஆளுநரின் கண் திறக்காதா? – முத்தரசன் வேதனை

இணையதள சூதாட்ட மரணங்களுக்கு, ஆளுநர் மாளிகை தனது கண்களைத் திறக்காத்து வேதனையானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இணையதள சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்து விட்ட சென்னை, கேகே நகரை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சாவுகள் தினசரி செய்தியாகி வரும் நிலையிலும் ஆளுநர் மாளிகையின் கண்கள் திறக்காத்து மிகவும் வேதனையானது.

இணையதள சூதாட்டத்தின் விபரீத விளைவுகளை உணர்ந்த தமிழ்நாடு அரசு அவசரச் சட்டத்தின் மூலம் அந்த சூதாட்டத்தை தடை செய்தது.

இந்தச் அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்க, சட்டப் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கம் பெற்ற ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தி வருவது சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, குடிமக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.

இதற்கிடையில் சூதாட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடியது ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூதாட்டத்தால் தினசரி குடிமக்கள் செத்து மடிவதைத் தடுக்க ஆளுநர் மாளிகை மக்கள் படும் துயரை கண்திறந்து பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசின் சூதாட்டத் தடை சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Response