உதயநிதிக்கு இவ்வளவு அதிகாரங்களா? – வியக்க வைக்கும் தகவல்கள்

தமிழ்நாடு அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள்,மற்றும் ஊரகக் கடன்கள் போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டத்தட்ட முதலமைச்சர் போன்றது. இந்தத் துறையை வைத்து இருக்கும் அமைச்சர், எந்தத் துறைக்குக் கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்துத் துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஆனால், இந்தச் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையைக் கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்தத் துறையில் வேண்டுமானாலும் சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும்.

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்தத் துறை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்புத் திட்டங்களை கண்காணிக்கவும் இந்தத்துறை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சிறப்புத்திட்டங்களைக் கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் முதன்முறையாகத் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளுடன் இந்தத் துறை அமைச்சர் இணைந்து செயல்படுவார்.

இந்தத் துறை குறித்து அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது……

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் தனியாக ஒரு துறை தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்முனை சிறப்புத் திட்டங்களை அறிவியல் தொழில் நுட்பம் மூலம் செயல்படுத்தி அனைத்துத் தரப்பினரும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் பெற்ற ஒரு புதுயுகத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்ல விழைந்துள்ளது.

வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்புப் போன்ற முக்கிய துறைகளின் சீரான திட்டமிடப்பட்ட, நீடித்த வளர்ச்சியினை அடைய இத்துறை தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயலாற்றும்.

இத்துறையானது, அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற, குறிப்பாக ஏழைகள் மற்றும் மகளிர் பயனுறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்தல்.

கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் குறித்த காலங்களில் மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்துதல்.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அலுவலர்களை, களப்பணி ஆய்வுகளை அடிக்கடி மேற்கொள்ளச் செய்து, திட்டங்களின் தரம் மற்றும் திறன் விவரங்களை ஆராய்ந்து அவை குறித்த கருத்துக்களை அரசிற்கு இத்துறை அளிக்கும். மேலும், திட்டங்களின் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தி, மேம்படுத்தும் வழிமுறைகளை, தேவைப்படும்போது அரசிற்கு இத்துறை பரிந்துரைக்கும். இத்துறை, பிற துறைகளுடன் இணைந்து செயலாற்றுவதுடன், கள ஆய்வு விவரங்களின் அடிப்படையில், திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற, உரிய கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான தக்க பரிந்துரைகளை வழங்கும்.

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செவ்வனே செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறை செவ்வனே செயல்படும்.

இவ்வளவு சிறப்புமிக்க துறைதான் உதயநிதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதுவரை முதலமைச்சர் தான் இந்தத் துறையை வைத்திருந்தார்.

தற்போது முதலமைச்சரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தத் துறை சென்றுள்ளது.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களைக் கண்காணிக்க முடியும். அந்தத் திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்வது என்பது தொடர்பாக இந்தத் துறை ஆலோசனைகளை வழங்க முடியும்.

மற்ற துறைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பும் உதயநிதிக்குக் கிடைக்கும். இதன் மூலம் மற்ற துறைகளுடன் உதயநிதி இணைந்து பணியாற்ற முடியும்.

இதன்மூலம் இன்னொரு முதலமைச்சர் போல அவர் செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response