மக்கள்கவியின் மகள் – கண்ணீர்த் தொகுப்பு

மக்கள்கவி கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்திருந்த கவிஞர், தன் ஆற்றாமையைக் கவிதைகளாக வடித்துள்ளார்.

ஆம், அவற்றை மகள் என்கிற பெயரில் தொகுப்பாகவும் வெளியிட்டுள்ளார்.

மிகவும் தரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் அத்தொகுப்பில், நான்கு பக்கங்களில் அவர் எழுதியிருக்கும் முன்னுரை அவர் மகளின் இருபதாண்டு வாழ்வைச் சொல்லிக் கலங்க வைக்கிறது.

மனைவி
இறக்கி வைத்ததிலிருந்து
நானே
சுமந்துகொண்டிருந்தேன்
கடைசியாய் சுமந்த
தீச்சட்டி வரை

என்கிற கவிதையில் அவருடைய மொத்த பாரமும் நம் மீது இறங்கிவிடுகிறது.அதைத் தாங்க முடியாமல் தவிக்கிறோம்.

வளராது என்று
தெரிந்தும்
ஒரு
விதையைப்
புதைத்து விட்டேன்

என்றவர் கலங்கும்போது கதறியழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

127 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தூரிகையின் புகைப்படங்கள் உயிரை உருக்குகின்றன. எல்லாப்படங்களிலும் அவர் சிரித்துக்கொண்டிருக்கிறார் நம்மை அழவைத்துவிட்டு.

இது கவிதைத் தொகுப்பன்று கண்ணீர்த் தொகுப்பு.

பின்னட்டையில் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1963 இல் எழுதிய பாடல் சுமார் அறுபதாண்டுகள் கழித்து இன்றும் பொருந்துகிறது.

அதுபோல் இக்கண்ணீர்த்தொகுப்பும் காலங்கடந்தும் கரையாது.

Leave a Response