பழனி கொடைக்கானல் ரோப்கார் திட்டத்துக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில், சர்வதேசச் சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஆகியவை அமைந்துள்ளன.

திருவிழாக் காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதேபோல் சீசன் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதும், பழனிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு கொடைக்கானலுக்குச் செல்வதும் வழக்கம்.

இவ்வாறு வருகிற சுற்றுலாப் பயணிகள், 64 கிலோமீட்டர் தூரம் கொண்ட பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியாக பேருந்து,மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த மலைப்பாதையில் சென்று வர சுமார் 3 மணி நேரம் ஆகும்.அபாயகரமான கொண்டைஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்தை எளிதாக்கவும், சுற்றுலா, வணிகம் வளர்ச்சி பெறவும் பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து, 2005 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தத் திட்டம் பற்றி எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இந்திய ஒன்றியம் முழுவதும் 18 இடங்களில் ரோப்கார் திட்டம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

இதில் பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டமும் இடம் பெற்றிருந்தது. 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இடையே அமையும் இந்த ரோப்காரில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஜியோடாமின் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது……

பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ஒரு மணிநேரத்தில் 8,000 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் வகையிலான ரோப் கார் அமைக்கப்படுவதற்கானத் திட்டமிடல் நடந்துவருகிறது.

ஒரு காட்டை மொத்தமாய் அழித்து நாசம்செய்ய இதைவிட வேறு எப்படியேனும் சிறப்பாகத் திட்டமிட முடியுமாவென்று தெரியவில்லை.

ஏற்கெனவே வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளின் குறைந்தபட்சத் தேவையான நீரைக்கூடக் கொடுக்க முடியாமல் திணறுகிறது கொடைக்கானல். சுற்றுலாவால் உருவாகும் திடக்கழிவுகள், வாழிட அழிப்பு, ஆக்கிரமிப்பு, ரிசாட்டுகள், ஒலி – ஒளி மாசு, வாகனப் பெருக்கம், நெரிசல், நிலச் சரிவுகள் என ஏற்கனவே செத்துக்கொண்டிருக்கும் ஒரு மழைக்காட்டுக்குள் ஒவ்வொரு மணிநேரத்துக்கு கூடுதலாக 8,000 பேரைக் கொண்டிறக்குவது அதற்கு சங்கு ஊதி சமாதி கட்டுவதேயன்றி வேறில்லை.

கூடுதலாக ரோப்காருக்காக அமைக்கப்படும் டவர்கள் அவற்றின் கட்டுமானங்கள், இயக்கம் மற்றும் பராமரிப்பின்போது வன விலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகள் இன்னும் மனித விலங்கு மோதல்களை அதிகரித்து இறுதியில் என்ன அங்க எஞ்சப் போகிறது என்பது தெரியவில்லை.

இயற்கை ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் இதற்கு எதிராகத் தம் குரலைப் பதிவு செய்ய வேண்டும். காடுகளை வணிகத்தளங்களாகப் பாவிக்கும் ‘எக்கோ டூரிசம்’ திட்டங்களை நாம் அனுமதித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நம் கண்முன்னேயே நம் செழிப்புமிக்கக் காடுகள் அழிவதை நாம் காண்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response