எடப்பாடி சிறைக்குச் செல்வார் நானே பொதுச்செயலாளர் – ஓபிஎஸ் அதிரடி

அதிமுக பொதுக்குழு கடந்த 23 ஆம் தேதி சென்னையில் பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே நடந்து முடிந்தது. இதையடுத்து அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவர் மகன் இரவீந்திரநாத் (பாராளுமன்ற உறுப்பினர்), மனோஜ்பாண்டியன் (சட்டமன்ற உறுப்பினர்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச்சென்றனர்.

பொதுக்குழுவில் நடந்த விவகாரங்கள் குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் செய்யப்போகிறார். பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசப்போகிறார் என்று பலவிதமான யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார்.
மறுநாள் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கூட்டணிக்கட்சித் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பிரதமரைச் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அதன்பின்பு மீண்டும் விடுதியில் வந்து தங்கியிருந்தார்.

அதன்பின்பு மாலையில் விடுதியில் இருந்து, தனது மகன் இரவீந்திரநாத் வீட்டிற்குச் சென்றார். அங்கு பாஜக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வந்து, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவே சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னைக்குத் திரும்பாமல், டெல்லியில் உள்ள விடுதிக்குச் சென்று தங்கிவிட்டார். பிரதமரை நேற்று சந்தித்துப்பேச முடியாவிட்டாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சிலரைச் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் யாரையுமே சந்திக்கவில்லை. விடுதியிலேயே தங்கியிருந்தார்.

அதன்பின்பு, நேற்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை வந்தார். அவருடன் இரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் வரவேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய திருச்சி பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்வதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று இரவு முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு பொதுக்குழு விவகாரம் குறித்தும், தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் குறித்தும் பேசுவதோடு, ஆதரவாக செயல்படும்படியும் கேட்டுக் கொண்டார். அவர் தொடர்ந்து முன்னாள் மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டு பேசத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் உள்ள முன்னாள் அமைச்சர்களால் பழிவாங்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகளையும் அவர் ஒன்று திரட்டவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக மூத்த தலைவர்களுடன் பேசி தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் மாஜிக்களை அவர் திரட்டத் தொடங்கியுள்ளது, மோதலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

மேலும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது வன்னியர் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால், தென் மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. இதனால் தேர்தலிலும் குறிப்பிட்ட சமூகம் அதிமுகவைப் புறக்கணித்தது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம், தனக்கு ஆதரவாக உள்ள தென் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மக்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், சுற்றுப் பயணம் செய்வது குறித்தும் முன்னணி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளின்போது, எடப்பாடி விரைவில் சிறைக்குச் செல்வார்.அப்போது நான் தான் கட்சிக்குத் தலைமை ஏற்கவேண்டும், எனவே என்னை நம்பி வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டுவதாக எடப்பாடி அணி அறிவித்துள்ளது. அவ்வாறு கூட்டினால் அதைச் சட்ட ரீதியாக தடுப்பது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓபிஎஸ்ஸின் இந்தப் பேச்சு எடப்பாடி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதாம்.

Leave a Response