முதல்நாள் கோரிக்கை மறுநாள் ஆணை – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் பாராட்டு

சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட புதிய ஆணை பிறப்பித்ததற்குப் பாராட்டு தெரிவித்து தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் 21.06.2022 அன்று வெளியிட்ட ஆணையில், சிதம்பரம் நடராசர் திருக்கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபடும்போது தேவாரம் மற்றும் திருமுறைகளைப் பாடி வழிபட அனுமதி உண்டு என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி தேவாரம் மற்றும் திருமுறைகள் பாடி வழிபட்டு வந்த மரபை அண்மையில் சிதம்பரம் தீட்சிதர்கள் மறுத்துத் தடை விதித்தார்கள். கொரோனா முடக்கத்தின்போது, சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடுவதையும் சன்னிதியில் நின்று பக்தர்கள் பூசை செய்வதையும் தடுத்து, அரசு வெளியிட்டிருந்த பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு நீக்கிக் கொண்ட பிறகும், சிற்றம்பல மேடையில் ஏறி பாடி வழிபடுவதற்குத் தீட்சிதர்கள் அடாவடியாகத் தடை விதித்தார்கள்.

தெய்வத் தமிழ்ப் பேரவை உட்பட பல்வேறு அமைப்புகளும் பக்தர்களும் சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடி வழிபட வேண்டுமென பலவகைப் போராட்டங்களை நடத்தினார்கள்.

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திட தனிச்சட்டம் இயற்றும்படியும் நாம் கோரி வந்தோம். இவை குறித்தெல்லாம் விசாரிப்பதற்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைத்து, அதன் மூலம் 2022 சூன் 20 – 21 ஆகிய நாட்களில் மக்களிடமிருந்து கருத்துகள் பெற ஏற்பாடு செய்தது.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் பக்தர்களும் கடலூரில் விசாரணைக் குழுத் தலைவரிடம் நேற்று (20.06.2022) கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பம் கொடுத்தோம். அவற்றுள் ஒரு கோரிக்கை – சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தமிழ்நாடு அரசு புதிய ஆணை பிறப்பித்திருந்தும், பக்தர்கள் வழிபடலாமே தவிர, தேவாரம் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்து வந்தார்கள். நம்முடைய மனுவில் இதைக் குறிப்பிட்டு, “வழிபடவும்” என்பதுடன் சேர்த்து, “தேவாரம் மற்றும் திருமுறைகள் பாடி வழிபட” தடை செய்யக் கூடாது, அனுமதி உண்டு என்று புதிய ஆணை வெளியிடுமாறு கேட்டிருந்தோம். மற்ற அமைப்புகளும் பக்தர்களும் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளன.

இந்நிலையில், மறுநாளே (21.06.2022) சிற்றம்பல மேடையில் தேவாரம் மற்றும் திருமுறைகள் பாடி வழிபட அனுமதி உண்டு என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணை பிறப்பித்திருக்கிறது. மற்ற நியாயமான கோரிக்கைகளையும் இதேபோல் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய ஆணை வெளியிட்டுமைக்கு தமிழ்நாடு அரசுக்கும், ஆணையருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், விசாரணைக் குழுவில் முதல் நாள் முற்பகலிலேயே கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைக்க வந்த தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களுக்கும் ஆன்மிகப் பெரியவர்களுக்கும் பக்தர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response