பாமகவின் தலைவராக அன்புமணி தேர்வு – அதற்கான எட்டு காரணங்கள்

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் மருத்துவர் இராமதாசு முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

இப்பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாசை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதில்….

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்வது மருத்துவர் இராமதாசால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாகத் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.

தமிழ்நாட்டு அரசுக்குப் புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதைப் பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது.

தமிழ்நாட்டு அரசியல் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே.மணி, கடந்த 25 ஆண்டுகளாக கட்சியைச் சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்துச் செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

1.இந்திய வரலாற்றில் இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றவர்,
2.உலகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தியவர்,
3.உயிர் காக்கும் 108 அவசர ஊர்திச் சேவையை அறிமுகம் செய்தவர்,
4.புகையிலை ஒழிப்பு மற்றும் போலியோ நோய் ஒழிப்புக்காக 4 சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றவர்,
5.மிகவும் இளைய வயதில் உலக சுகாதார அவையை தலைமையேற்று நடத்தியவர்,
6.50 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஐந்தாண்டுகளில் செய்தவர் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களாலும், மருத்துவத் துறையின் நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்களாலும் பாராட்டப்பட்டவர்,
7.ஐ.நா. தலைமைச் செயலாளராக இருந்த பான்-கி-மூன் அவர்களே மரபுவரிசையை மீறி, அலுவலகத்திற்குத் தேடி வந்து பாராட்டிய பெருமைக்குரியவர்,
8.மருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதி காத்தவர்

இப்படி ஏராளமான பெருமைகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரரான மருத்துவர் அன்புமணி ராமதாசு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் கட்சியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார் என்று இந்தப் பொதுக்குழு நம்புகிறது.

தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்துத் தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாசு தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கருதுகிறது.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியைக் கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஜி.கே.மணி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்புப் பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசை ஒருமனதாகத் தேர்வு செய்கிறது.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு இதுவரை தலைவராக இருந்த ஜி.கே.மணி இனிமேல் கெளரவத் தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Response