நிலத்தைத் திரும்பத் தரமுடியாது – உயர்நீதிமன்றம் உத்தரவு பாமக ஏற்பு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 2 ஆம் கட்ட சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் 2007 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டன.

மழைக் காலத்தில் என்எல்சி சுரங்கம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஏற்படும் வெள்ளச் சேதத்தைத் தடுக்கும் நோக்கில், பரவனாறு ஆற்றை ஆழப்படுத்தி, இந்த நிலங்களின் வழியே மாற்று வழித்தடத்தில் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்தப் பணியின்போது, ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரங்களால், நன்கு விளைந்த நெற்பயிர்கள் நாசமாகின. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாமக தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே கையகப்படுத்திய நிலத்தை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிர்வாகம் பயன்படுத்தாததால், அந்த நிலத்தை தன்னிடமே திருப்பி ஒப்படைக்கக் கோரி, பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து என்எல்சி மற்றும் தமிழ்நாடு அரசும், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அறுவடைப் பணிகளை முடித்து நிலத்தை ஒப்படைப்போம் என விவசாயிகள் தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அப்போது, சேதப்படுத்தப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து தமிழ்நாடு அரசும், என்.எல்.சி. தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்.எல்.சி. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யும் வரை தொந்தரவு செய்யப் போவதில்லை. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, இழப்பீடு போதுமானதல்ல. ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது….

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நில உரிமையாளர்கள் உரிமை கோர முடியாது. அந்த நிலத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி இல்லை. அப்படி உரிமை கோரி நிலத்திற்குள் நுழைந்தால் அது அத்துமீறி நுழைந்ததாக கருதப்படும். என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக நிலத்தின் உரிமையாளர்களை விவசாயம் செய்ய அனுமதித்து திடீரென்று பயிர்களை சேதப்படுத்தியதை ஏற்க முடியாது.

அதே நேரத்தில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி அனைத்துக் குடிமக்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாவார்கள். நில உரிமையாளர்களில் 88 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு தர அரசு தரப்பும், என்.எல்.சி தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே, என்.எல்.சி நிறுவனம் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்தை வரும் 6 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட விவசாயிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தாசில்தாரை அணுகி இழப்பீடு பெற்றுக்கொள்ள வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு மேல் விவசாயம் செய்யக் கூடாது. இந்த விசயத்தில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். வழக்கு இறுதி தீர்ப்புக்காக 7 ஆம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் அந்நிலங்களைத் திரும்பத் தரவியலாது என்கிற உத்தரவுக்கு தமிழ்நாடு அரசும் பாமக வழக்கறிஞரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response