பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8 இலட்சம்பேர் எழுதுகின்றனர்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 இலட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 இலட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 இலட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 இலட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டாலும், மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும் என்றும், அந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வறைக்கு வர வேண்டும். அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு 2-வது மணி 2 முறை அடிக்கப்படும். அப்போது அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளைப் பிரிக்கவேண்டும். காலை 10 மணிக்கு 3-வது மணி 3 முறை அடிக்கப்படும். அந்த நேரத்தில் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாளை மாணவர்கள் காலை 10 மணியில் இருந்து 10.10 மணி வரை படித்துப் பார்க்கவேண்டும் என்று கல்வித்துறை கூறி இருக்கிறது.

அதன் பின்னர் காலை 10.10 மணிக்கு 4-வது மணி 4 முறை அடிக்கப்படும்போது, மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு 5-வது மணி 5 முறை அடிக்கப்படும். அந்த நேரத்தில் தேர்வு எழுதத் தொடங்கலாம். பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும். அப்போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும். பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவுபெற்றதற்கான நீண்ட மணி அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறையில் மாணவர்கள் தடையின்றித் தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து செய்து இருக்கிறது. கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தேர்வை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தமிழ் தேர்வு நடைபெற இருக்கிறது. அடுத்ததாக வருகிற 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடைபெற உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடக்கிறது.

Leave a Response