கமுக்கமாக நடந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகள் திருமணம் – காரணம் என்ன? மக்கள் கேள்வி

தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.இரவி மகள் திருமணம் அண்மையில் நடந்துள்ளது. மிகவும் இரகசியமாக நடந்த அத்திருமணத்தின்போது பல அத்துமீறல்களும் நடந்துள்ளன. ஆனால் அவை எதுவுமே வெளிவரவில்லை. இந்நிலையில், தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

அவருடைய பதிவில்…

பீகாரைச் சார்ந்த ஆளுநர் இரவி தமிழ்நாட்டு ஆளுநராக வந்து ஆறு மாதத்திற்குள் (கடந்த பிப்ரவரியில்) அவரின் மகளின் திருமணத்தை உதகையில் ஏன் நடத்த வேண்டும்?

பீகாரில் உள்ள உற்றார் உறவினரோடு பீகாரில் நடத்துவதை விட்டு விட்டுத் தமிழ்நாட்டில்.. உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரின் உறவுக்கூட்டம் வந்து கொட்டமடிக்க தமிழ்நாடு என்ன திறந்த மடமா?

ஆண்டாண்டுக் காலமாக வெள்ளை வண்ணப்பூச்சிலிருந்த உதகை ஆளுநர் மாளிகையைத் திருமணத்திற்காகப் பல இலக்கம் செலவில் பச்சை நிற வண்ணப்பூச்சில் மாற்றியது எதற்காக?

பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் உதகையில் ஆளுநர் மாளிகை முழுவதும் புதுப்பிக்கப்பட்டதாம்… திருமணத்துக்காக ஆளுநர் மாளிகை தோரணங்கள், நுழைவு வாயில்களில் தென்னங்கீற்று, வாழை, பாக்கு மரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டனவாம்… திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் பாதுகாப்பு காரணமாக உதகை தனியார் விண்மீன் தங்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனராம்…

திருமணத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையின் சுற்று வட்டார பகுதிகளில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. அரசு தாவரவியல் பூங்காவிலேயே தற்காலிக ஆய்வு சாவடி அமைக்கப்பட்டு, வண்டிகள் தணிக்கை செய்யப்பட்டது. தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மற்றபடி ஆளுநர் மகள் திருமணம் பற்றிய நிகழ்ச்சி பெரிய அளவில் செய்தி வெளியாகவில்லை.. படங்களும் வெளியாகவில்லை.

அந்தக் கமுக்கங்களுக்குள் வேறு என்னென்ன செய்திகள்?..

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதிகார பலத்தைக் கொண்டு இரகசியமாக எதையோ செய்திருக்கிறார்கள் என்கிற ஐயம் மக்களுக்கு எழுகிறது.

Leave a Response